teacher misbehaving with schoolgirls

கோவை அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில், 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில், பால்ராஜ் என்பவர் நூலக பொறுப்பு ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் அப்பள்ளியில் பயின்று வரும் 9 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லைகொடுத்துள்ளார். நாளாக நாளாக பால்ராஜின் தொந்தரவு அதிகரிக்க, ஆத்திரமடைந்த மாணவி தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்பள்ளிக்குச் சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் நூலக பொறுப்பு ஆசிரியர் பால்ராஜை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. இந்த நிலையில் இது சம்பந்தமான புகார் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், குழந்தை நல வாரிய அதிகாரிகளுக்கும் சென்றுள்ளது.

உடனடியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று மாணவிகளிடம் தனித்தனியே விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, பால்ராஜ் மேலும் இரு மாணவிகளுக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லைகொடுத்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட குழந்தை நல அதிகாரிகள் ஆர்.எஸ்.புரம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார் பால்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.