
தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்திற்குத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மும்மொழிக் கொள்கையைத் திணிக்க மத்திய அரசு முயல்வதாகக் கூறி எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் தமிழகத்தில் இரு மொழி கொள்கை மட்டுமே; மத்திய அரசு இந்தியைத் திணிக்கக் கூடாது என்று கண்டனங்களையும், கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் ரயில் நிலையங்கள், அஞ்சல் அலுவலகம் உள்ளிட்ட மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் பெயர் பலகையில் இருக்கும் இந்தி வார்த்தைகளை கருப்பு மை கொண்டு அழிக்கும் போராட்டமும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் சிபிஎஸ்சி பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவர் இந்தி கவிதை சொல்லாததால் ஆசிரியர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் சிபிஎஸ்சி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தனது பாடப்புத்தகத்தில் உள்ள இந்தி கவிதை சொல்ல முடியாமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் மாணவனை தாக்கிய மிரட்டியதாக அவரது பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. தற்போது இந்த விவகாரம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.