Skip to main content

திருவாரூர் ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் வழக்கில் ஆசிரியர் கைது!

Published on 13/09/2018 | Edited on 13/09/2018
thiruvayaru


திருவாரூரில் ரூ.10 கோடி கேட்டு கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் தனிப்படை போலீசாரால் மீட்கப்பட்ட வழக்கில் அரசு பள்ளி ஆசிரியர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருவாரூரில் கிருஷ்ணா ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அதிபர் நீதிமோகன் கடந்த 8ம் தேதி இருசக்கர வானத்தில் சென்ற போது காரில் வந்த மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். அதன் பின்னர் அவரை விடுவிக்க ரூ.10 கோடி கேட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து நீதிமோகன் அலுவலகத்தின் உதவியாளர் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கடத்தப்பட்ட நீதிமோகனை தேடி வந்தனர்.

இந்நிலையில், நீதிமோகன் மீது மாத தவனை திட்டத்தில் நிலம் வழங்குவதாக பலரை மோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இதனால், போலீசார் நீதிமோகனால் பாதிக்கபட்டவர்கள் யாரேனும் அவரை கடத்தியிருப்பார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் மன்னார்குடியை சோ்ந்த அரசு பள்ளி ஆசிரியர் வெங்கடாசலம் (48) உள்ளிட்ட பலர் இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளது போலீசாருக்கு தெரியவந்தது.
 

thiruvayaru


இதையடுத்து, ஆசிரியர் வெங்கடாசலம் அளித்த தகவலின் பேரில் நீதிமோகனை கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் மீட்டனர். இதைத்தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட வெங்கடாசலத்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கடத்தலில் சம்பந்தப்பட்ட கீழபனையூரை சோ்ந்த ஜான் கென்னடி(43), வடக்கு பனையூரை சோ்ந்த ரசாக் என்கிற இமையராஜா(36) ஆகியோர் கைது செய்யப்பட்டு அதிகாலையில் நீதிபதி குமார் முன்னிலையில், ஆஜர்ப்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் சிலைரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அதிபர் நீதிமோகன் நிலம் வழங்குவதாக பணத்தை பெற்று கொண்டு நிலம் வழங்காமலும் பணத்தை திரும்ப அளிக்காததாலும் ஆசிரியர் கடந்த 2014ம் ஆண்டு திருவாரூர் குற்றப்பிரிவில் வழக்கு கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்து கடத்தல் முயற்சியை மேற்கொண்டதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

15 லட்சம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை; 500 கோடி ரூபாய் மோசடி வழக்கில் திருப்பம்!

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

15 lakh page charge sheet against real estate owner
வின் ஸ்டார் சிவக்குமார்

 

சேலத்தில், ரியல் எஸ்டேட் அதிபர் வின் ஸ்டார் சிவக்குமார் உள்ளிட்ட 30 பேர் மீதான மோசடி வழக்கில் 15 லட்சம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை டான்பிட் நீதிமன்றத்தில் அக். 5ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.    

 

சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சிவக்குமார். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே, வின் ஸ்டார் இண்டியா சிட்டி டெவலப்பர்ஸ் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வந்தார். நிலத்தில் முதலீடு செய்தால் 11 மாதத்தில் இரட்டிப்பு விலை கொடுத்து நாங்களே நிலத்தை வாங்கிக் கொள்கிறோம் அல்லது அதற்கு நிகரான லாபத்தைக் கொடுத்து விடுவதோடு, அசல் முதலீட்டையும் கொடுத்து விடுகிறோம் என்று பல்வேறு விதமான கவர்ச்சி அறிவிப்புகளை வின் ஸ்டார் நிறுவனத்தார் வெளியிட்டனர். ஒருகட்டத்தில், எம்எல்எம் முறையிலும் ரியல் எஸ்டேட் தொழிலை நடத்தினர்.    

 

கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பி 4000க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் வின் ஸ்டார் நிறுவனத்தில் முதலீடுகளை கொட்டினர். இத்துடன் நில்லாமல் வின் ஸ்டார் பெயரில் ஜவுளிக்கடை, உள்ளூர் கேபிள் டிவி, ஸ்வீட் கடைகள், ஜவுளிக்கடை, பட்டாசு தொழில், நெல்லிச்சாறு விற்பனை உள்ளிட்ட தொழில்களிலும் இறங்கினார். ரியல் எஸ்டேட் தொழிலில் ஓரளவு லாபம் பார்த்த முதலீட்டாளர்கள் அவர் தொடங்கிய மற்ற தொழில்களிலும் முதலீடு செய்தனர்.  இந்நிலையில், திடீரென்று சிவக்குமார் பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்தார். முதிர்வு காலத்திற்குப் பிறகும் முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றினார்.    

 

இதையடுத்து அவர் மீது 1686 முதலீட்டாளர்கள் புகார் அளித்தனர். இதுகுறித்து, கடந்த 2017ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்த சேலம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் சிவக்குமாரை கைது செய்தனர். அவர் உட்பட 30 பேருக்கு இந்த மோசடியில் பங்கிருப்பதும், 500 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்திருப்பதும் தெரிய வந்தது. முதலீட்டாளர்களிடம் பெற்ற பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவதாக நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததை அடுத்து, கடந்த 2018ம் ஆண்டு அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இது ஒருபுறம் இருக்க, கோவையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி தங்கராசு தலைமையில் இந்த வழக்கை விசாரிக்க ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.     

 

இந்தக் குழுவின் விசாரணையில், முதலீட்டாளர்களிடம் சுருட்டிய கோடிக்கணக்கான ரூபாய் பணத்தைக் கொண்டு சிவக்குமார் தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் நிலங்களையும், வீடுகளையும் வாங்கிக் குவித்து இருப்பது தெரிய வந்தது.  பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில் விசாரணை முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது சிவக்குமார் உள்ளிட்ட 30 பேர் மீதும் கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதற்காக ஒரு நபருக்கு 50 ஆயிரம் பக்கங்கள் வீதம், குற்றம் சாட்டப்பட்டுள்ள 30 பேருக்கும் மொத்தம் 15 லட்சம் பக்கங்களில் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு உள்ளது. குற்றப்பத்திரிகை ஆவணங்களை நகல் எடுப்பதற்காகவே 14 லட்சம் ரூபாய்க்கு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம்  விடப்பட்டது.       

 

இந்த வழக்கு, டான்பிட் நீதிமன்றத்தில் அக். 5ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது நீதிபதி முன்பு குற்றப்பத்திரிகை ஆவணங்கள்  தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக 15 லட்சம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை ஆவணங்களும் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சேலத்தில் இருந்து அக். 2ஆம் தேதி டான்பிட் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தமிழகத்தில், ஒரு மோசடி வழக்கில் முதன்முதலாக 15 லட்சம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவது வரலாற்றில் இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Next Story

சென்னையில் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஐடி ரெய்டு

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

 IT raid on a famous real estate company in Chennai

 

அண்மையில் தமிழகத்தில் மணல் குவாரி மற்றும் ஐடி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள பிரபல நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

தமிழகத்தில் சென்னை எம்.ஆர்.சி நகரில் இருக்கக்கூடிய புரவங்கரா என்ற அந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் தான் இந்த வருமானவரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனமானது பெங்களூரு, புனே, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நிறுவனங்களை தொடங்கி அடுக்குமாடி குடியிருப்புகளையும் நிலங்களையும் வாங்கி விற்பனை செய்து வருகிறது.

 

2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு பல்வேறு மாநிலங்களில் இந்த நிறுவனமானது தொடங்கப்பட்டு அடுக்கு மாடி குடியிருப்புகளை விற்றதில் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த வருடம் மட்டும் 1100 கோடி ரூபாய்க்கு மேல் அந்த நிறுவனம் வருமானத்தை ஈட்டி இருப்பதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். எட்டு அதிகாரிகள் உள்ளே சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.