
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள ஆலங்காயம் மலைரெட்டியூர் என்ற பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு ஊத்தங்கரையைச் சேர்ந்த பிரபு என்பவர் தற்காலிக ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இந்த பள்ளியில் படித்து வரும் 7ஆம் வகுப்பு மாணவிகள் 6 பேருக்கு ஆசிரியர் பிரபு, கணினி தேர்வின் போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்துப் பாதிக்கப்பட்ட மாணவிகள் குழந்தைகள் உதவி மைய எண் (child helpline number - 1098) மூலம் மாவட்ட குழந்தை நல அமைப்பினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்களான மேத்யூவ் மற்றும் சாதனா ஆகியோர் அடங்கிய குழுவினர் நேரடியாகச் சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளிக்குச் சென்று விசாரணைக்கு மேற்கொண்டனர். அப்போது 6 மாணவிகளும் ஆசிரியர் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகவும், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் எழுத்துப்பூர்வமாகப் புகார் புகார் அளித்தனர்.
இதனையடுத்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்களான மேத்யூவ் மற்றும் சாதனா ஆகியோர் இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் ஆசிரியர் பிரபுவைக் கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்சோஉள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் 6 பேருக்குத் தற்காலிக ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலையையும் ஏற்படுத்தி உள்ளது.