
வகுப்பிற்கு வராமல் கட் அடித்துச் சுற்றிக்கொண்டிருந்த பள்ளி மாணவனைத் தரையில் முட்டிப்போட வைத்து, ஆசிரியர் ஒருவர் சரமாரியாக அடித்து உதைக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கிவருகிறது. இது ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் மிகப்பெரிய பள்ளிகளில் ஒன்றாகும். சிதம்பரம் - சீர்காழி மெயின் ரோட்டில் அமைந்துள்ள இந்தப் பள்ளியில், ஆறாம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்புவரை சுமார் 450க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றனர். இந்த நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் சில மாணவர்கள் இயற்பியல் வகுப்பை கட் அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர். முதல் வகுப்பில் இருக்கும் மாணவர்கள், இரண்டாவது வகுப்பான இயற்பியல் வகுப்பில் கலந்துகொள்ளாமல் வெளியே சென்றுள்ளனர். இதனால், அந்த மாணவர்கள் வசிக்கும் அடூர் கிராமத்திற்குச் சென்று தேடிய ஆசிரியர்கள், அம்மாணவர்களைக் கையோடு பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதனைக் கண்டிக்கும் விதமாக, அம்மாணவர்களைக் கரும்பலகையின் கீழே முட்டிப் போட வைத்துள்ளார் இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணியன். அதில், ஒரு மாணவர் ஆசிரியரிடம் எதிர்த்துப் பேசியதாகவும் அதைக் கண்டு அங்கிருந்த மாணவர்கள் சிலர் சிரித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் சுப்பிரமணியன், கையில் வைத்திருந்த பிரம்பால் அந்த மாணவனைத் தாக்கியுள்ளார். அத்துடன், கால்களால் அம்மாணவனை எட்டி உதைத்துள்ளார். இதைக் கடைசி பெஞ்ச் மாணவர்கள் சிலர் ரகசியமாகப் படம் பிடித்துள்ளனர். அத்துடன் இந்த வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தும் உள்ளனர். இதனால் இந்த வீடியோ மாவட்ட ஆட்சியர் வரை சென்றது.
இந்நிலையில் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிறுவர்களுக்கு எதிரான குற்றம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் ஆசிரியர் சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)