ஈரோடு அடுத்த முத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். ரெட் டாக்ஸி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று வித்யா நகர் பகுதியில் பயணிகளை ஏற்றுக் கொண்டு பெருந்துறைக்குப் பயணித்துள்ளார். ஏற்கனவே அங்கு வாடகை வாகனம் வைத்து தொழில் செய்து கொண்டிருந்த சிலர் சுரேஷின் வாகனத்தை மறித்து ஈரோடு கால் டாக்ஸிகளுக்கு பெருந்துறைக்கு வாடகை ஏற்றிச்செல்ல அனுமதி இல்லை எனக் கூறி சுரேஷ் மீது தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும் காருக்குள் இருந்த பயணிகளை வாடகை வாகனத்திற்குள் ஏற்றி ஈரோடு வித்யா நகரில் இருக்கும் வீட்டில் வீட்டுள்ளனர். தங்களின் வாகனத்தில் இருந்த பயணிகளை வேறொரு வாகனத்தில் அத்துமீறி ஏற்றியதைக் கேள்விப்பட்ட ரெட் டாக்ஸி ஓட்டுநர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பெருந்துறை வாடகை வாகன ஓட்டுநரைச் சிறை பிடித்து கேள்வி எழுப்பி உள்ளனர். பெருந்துறை பகுதியை சேர்ந்த வாடகை வாகன ஓட்டுநர் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரெட் டாக்ஸி ஓட்டுநர்களைக் குத்த முயன்றுள்ளார்.. இதனால் கோபமடைந்த ரெட் டாக்ஸி ஓட்டுநர்கள் தங்களது எதிர்ப்பை காண்பிக்கும் விதமாக ஈரோடு சோலார் பேருந்து நிலையத்தில் ஒருசேர 200க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி மொடக்குறிச்சி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வாடகை கார் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து தனியார் டாக்ஸி ஓட்டுநர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.மேலும் ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் டாக்ஸி ஓட்டுநர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.