Skip to main content

டீ கடைக்குள் நுழைந்த டாட்டா ஏஸ் வாகனம்: 2 பேர் உயிரிழப்பு, 5 பேர் படுகாயம்  

Published on 19/01/2021 | Edited on 19/01/2021

 

  vehicle

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்து சின்னவரிகம் கிராமத்தில் ஆம்பூரில் இருந்து பேரணாம்பட்டு நோக்கி டாட்டா ஏஸ் வாகனம் ஒன்று சென்றது. இளங்கோ என்பவர் ஓட்டிக்கொண்டு சென்றார். இளங்கோவின் கட்டுப்பாட்டை இழந்த டாட்டா ஏஸ் வாகனம் சாலையில் தாறுமாறாக ஓடிய இரண்டு இரு சக்கர வாகனங்கள், ஒரு மிதிவண்டி  மீது மோதியதோடு அருகில் இருந்த டீ கடைக்குள் நுழைந்து விபத்து ஏற்படுத்தியது.

 

இந்த விபத்தில் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு ஆம்பூருக்கு இருசக்கர வாகனத்தில் குடும்பத்தோடு வீடு திரும்பிக்கொண்டிருந்த ஆம்பூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த மகேஷ்பாபு என்பவரின் மகன் 4 வயது சிறுவன் மணிமாறன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த ஆம்பூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த கணேஷ், கோகுல், தினேஷ் ஆகியோர் படுகாயமடைந்தனர். சாலை ஓரமாக மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்த அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த ஜோசப் என்பவர் படுகாயம் அடைந்தார். டீக்கடையில் நின்றுகொண்டிருந்த பெரியவரிகம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மற்றும் டீக்கடை உரிமையாளர் வேண்டா ஆகியோர் மீதும் டாட்டா ஏஸ் வாகனம் மோதியது. இதில் சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். 

 

படுகாயம் அடைந்த 5 பேரையும் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாட்டா ஏஸ் வாகன ஓட்டுநர் பாலூர் பகுதியைச் சேர்ந்த இளங்கோவனை கைது செய்து உமராபாத் காவல் நிலைய காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜெ. படத்தை அகற்றிய ஓ.பி.எஸ்.! -ர.ர.க்கள் அதிர்ச்சி!

Published on 01/03/2021 | Edited on 01/03/2021
ddd

 

தமிழகத்தின் அரசியல் மையப் பேச்சாக இருக்கும் திராவிடத்தை நகர்த்திவிட்டு, ஆன்மிகத்தைக் கொண்டுவருவதற்கு பா.ஜ.க. பிரம்ம பிரயத்தனம் செய்துவருகிறது. ஆனால் திராவிடக் கட்சிகளோ… பா.ஜ.க. பாணியை தங்களுடையதாக்கி டஃப் தருகின்றன.

 

தமிழக பா.ஜ.க. வேல் யாத்திரை தொடங்கி பிள்ளையார் சுழி போட்டுவைக்க, கடந்த மாதம் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர்கள் சிலர் ஆறடி உயரத்தில் வெள்ளியிலான வேலை ஓ.பி.எஸ்.ஸுக்கு பரிசாகக் கொடுத்தனர். திருவள்ளூர் மாவட்ட சுற்றுப் பயணத்தின்போது சில குருக்கள் ஸ்டாலினுக்கு வேலை அன்பளிப்பாகக் கொடுத்தனர். அடுத்தடுத்து வேலை அன்பளிப்பாக வாங்கிய பட்டியலில் துரைமுருகனும் இடம்பெற்றுவிட்டார்.

 

விரைவில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதை ஒட்டி அரசியல் கட்சித் தலைவர்களெல்லாம் தேர்தல் களத்தில் குதித்து மும்முரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டது முதல் உற்சாகமாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்துவருகிறார் எடப்பாடி. துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸோ தனது தொகுதியிலுள்ள நகரங்களையும் பட்டி தொட்டிகளையும் குறிவைத்து பிரச்சாரம் செய்துவருகிறாரே தவிர தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட வில்லை.

 

இந்நிலையில் ஓ.பி.எஸ். பிரச்சாரம் செய்யப் போகும் புதிய பிரச்சார வாகனத்தை ஓ.பி.எஸ்.சின் இளைய மகனான ஜெயபிரதீப் திருப்பதிக்கு கொண்டுசென்று அங்கு அய்யரை வைத்து சிறப்பு பூஜை செய்திருக்கிறார். இந்த பிரச்சார வாகனத்துக்கு நடுவில் ஜெயலலிதா படம் பெரியளவில் உள்ளது. வாகனத்தின் உள்பகுதியில் ஓ.பி.எஸ். உட்காரும் இடத்திற்கு எதிரே வழக்கமாக இருக்கும் ஜெ. படத்துக்குப் பதில், ஒரு ஜான் உயரத்தில் புதிதாக வேல் வைக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டு கட்சிக்காரர்களே ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

 

ddd

 

திருப்பதியில் சிறப்பு பூஜை செய்யப் பட்ட ஓ.பி.எஸ்.சின் பிரச்சார வாகனத்தையும் சென்னைக்கு கொண்டுவந்து தற்பொழுது நிறுத்தியிருக்கிறார்கள். இன்னும் ஒரு வாரத்தில் ஓ.பி.எஸ். தனது பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கவிருப்பதால் அதற்கான பணிகளில் கட்சிப் பொறுப்பாளர்களும் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

இந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் வேலை ஆதரிப்பவர்கள் பக்கம் நிற்கப்போகிறார்களா?… வேல்நுனி போல் கூர்மையான கேள்விகளால் மக்கள் பிரச்சனையைப் பேசுபவர்கள் பக்கம் நிற்கப் போகிறார்களா? பார்க்கலாம்!

 

 

 

Next Story

தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்திய மினிலாரி... 7 பேர் படுகாயம்!

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

cuddalore district, chidambaram area vehicle incident government hospital


மினிலாரி தாறுமாறாக ஓடியதில், ஏற்பட்ட விபத்தால் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (22 வயது). இவர் நேற்று (01/02/2021) ஊரிலிருந்து மினிவேனில் நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு, சிதம்பரம் அண்ணாமலை நகரில் இறக்கிவிட்டு மீண்டும் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அண்ணாமலைநகர் ரயில்வே மேம்பாலத்தில் ஏறி இறங்கியபோது அதிவேகமாக வந்த மினிலாரியில் எதிர்பாராத விதமாக பிரேக் பிடிக்காமல் போகவே, மினிலாரி தாறுமாறாகச் சென்றுள்ளது. அப்போது, சிதம்பரம் அரசு மருத்துவமனை அருகே வெளிப்பகுதியில் பழக்கடை வைத்திருந்த சிதம்பரத்தைச் சேர்ந்த ராமலிங்கம் (70), அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்திருந்த சிதம்பரத்தைச் சேர்ந்த வீரமணி (65), கருப்பூரைச் சேர்ந்த சாலையோர வியாபாரி இந்திராணி (60) ஆகியோர் மீது மோதியது.

 

மேலும், பேருந்து ஏறுவதற்காக அங்கு நின்றிருந்த மேலகுறியாமங்கலத்தைச் சேர்ந்த நந்தினி (19), ஸ்ரீராம் (19), உத்தமசோழமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன் (65), புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த தினேஷ் (22) ஆகிய 4 பேர் மீதும் மோதியது. இதில் 7 பேரும் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த 7 பேரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

 

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். பின்னர் வழக்குப் பதிவு செய்து டிரைவர் விக்னேஷை கைது செய்தனர். இந்த விபத்து குறித்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.