Skip to main content

ஊரடங்கிற்கு பிறகும் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

Published on 04/05/2020 | Edited on 04/05/2020

 

  Tasmac - TNGovt -chennai highcourt

 

எங்கெல்லாம் மதுக்கடைக்கடைகளை திறக்கலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தாலும் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


சென்னையை சேர்ந்த ஆர்.தனசேகரன் தாக்கல் செய்திருந்த மனுவில், மதுவால், ஒருவரது குடும்பமே சீரழிந்து விடுகிறது. இந்தியாவில், 33 லட்சம் பேர் மது குடித்ததால் இறந்துள்ளனர். இவர்களில் 18 லட்சம் பேர், தமிழகத்தை சேர்ந்தவர்கள். மக்களின் உடல் நலனையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும் கடமை அரசுக்கு உள்ளது. மதுவுக்கு எதிராக பலத்த குரல்கள் எழும்பி உள்ளன. படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாக, அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது.  ஆனால், வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. அதனால், கள்ளச்சாராயம் பெருக்கெடுக்கவில்லை, குற்றங்கள் குறைந்துள்ளன.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னும், மதுக் கடைகளை திறக்கக் கூடாது என அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கோரி வருகின்றனர். மேலும் மதுப் பழக்கத்தை பலரும் கைவிட்டுள்ளனர். அரசுக்கும் இது தொடர்பாக, மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. எனவே பூரண மதுவிலக்கை அமல்படுத்தும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும். வழக்கு விசாரணை முடியும் வரை, ஊரடங்கு முடிந்த பின்னும், மதுக் கடைகளைத் திறக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். 

 

 


இந்த வழக்கு,  நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பசத்யநாரயணா அமர்வு முன்பு இன்று வீடியோ கான்பரன்சிங் முறையில் விசாரிக்கப்பட்டது.  மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி, ஊரடங்கினால் மக்கள் குடிபழக்கத்தை மறந்துள்ளனர். எனவே பூரணமதுவிலக்கை அமல்படுத்தவேண்டும் என்று வாதிட்டார். அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய்நாரயணன், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. எங்கெல்லாம்  திறக்கலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தாலும் தமிழத்தில் திறக்கப்படவில்லை என தெரிவித்தார். 

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

 


 
 
 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் ஏரியூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் வேலூரை அடுத்த பெருமுகை கிராமத்தில் டாஸ்மாக் பாரை ஏலத்தில் எடுத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், ஏரியூர் பகுதியில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் திருவிழாவில் துரியோதனன் படுகளம் நேற்று (28-04-24) காலை நடந்தது. திருவிழாவில் அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கும், ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த பெரியவர்கள், இருதரப்பையும் விளக்கிவிட்டு அனுப்பியுள்ளனர். கோபம் குறையாமல் இருதரப்பும் சென்றுள்ளது.

அதன் பின்னர், இரவில் நடைபெற்ற தீமிதி திருவிழாவின்போதும் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் மீண்டும் தகராறு, மோதல் நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள், ‘ஏரியூர் பசங்க இங்கவந்து துள்ளக்காரணமே சந்துருதான்’ எனக்கூறி பெருமுகையில் உள்ள சந்துருவின் டாஸ்மாக் பாருக்கு சென்று காலி மது, பீர் பாட்டில்களால் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கி விரட்டியுள்ளனர். இதனால், அங்கு மது அருந்தி கொண்டிருந்தவர்கள் அலறியடித்து அங்கிருந்து ஓடியதும், அந்த வாலிபர்கள் அங்கிருந்த அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி பாருக்கு தீ வைத்துவிட்டு தப்பித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலூர் எஸ்.பி மணிவண்ணன், ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். டாஸ்மாக்கை அடித்து நொறுக்கி தீவைத்த நபர்களை சத்துவாச்சாரி காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.