டாஸ்மாக் கடை திறப்பு; பொதுமக்கள் எதிர்ப்பு!

Tasmac store opening Public  road block

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே, மங்கலம்பேட்டை பேரூராட்சியில் உள்ளது புல்லூர் கிராமம். இந்த கிராமம் கடலூர் - கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் உள்ளது. இங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியின் அருகில் டாஸ்மாக் திறக்கப்பட்டது. ஏற்கனவே, இப்பகுதியில் அதிகளவில் விபத்துகள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், டாஸ்மாக் கடையின் மூலம் விபத்துகள் இன்னும் அதிகரித்து வருகின்றன என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடை நடத்துவதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

அடிக்கடி விபத்து நடக்கும் இடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது விபத்துகளை இன்னும் அதிகரிக்கும். எனவே, கடையை மூட வேண்டுமென்று டாஸ்மாக் அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால், டாஸ்மாக் கடையை மூடக்கோரி நேற்று பொதுமக்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ. பாப்புலர் பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா ஆகிய கட்சிகளின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட பெண்கள், 300க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்துகொண்டனர். டாஸ்மாக் கடையை மூடக்கோரி டாஸ்மாக் கடை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.

அப்போது டாஸ்மாக் கடைக்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உளுந்தூர்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் கடையின் நுழைவுவாயில் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைவரும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மங்கலம்பேட்டை - திருச்சி ரோடு இணைப்புச் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உளுந்தூர்பேட்டை தாசில்தார் கோபாலகிருஷ்ணன், டி.எஸ்.பி. விஜயகுமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி டாஸ்மாக் கடையை மூடுவது குறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

kallakurichi TASMAC
இதையும் படியுங்கள்
Subscribe