/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/madurai3222111.jpg)
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வணிக வளாகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், பார்கள், சலூன் கடைகள், அழகு நிலையங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் அமர்ந்து உணவருந்த அனுமதி இல்லை என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இருப்பினும், டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக தமிழக அரசு எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்த நிலையில், கரோனா பரவலை மேலும் தடுக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் சார்பில் வழக்கறிஞர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (27/04/2021) ஆஜராகி, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூட உத்தரவிடக் கோரி முறையிட்டார். அதில், “கரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், டாஸ்மாக் கடைகளை முழுவதும் மூட வேண்டும். டாஸ்மாக் கடைகளில் நிரம்பி வழியும் கூட்டத்தால் கரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது”என்று முறையிட்டார்.
இதனை ஏற்ற நீதிபதிகள், “முறையீட்டை மனுவாகதாக்கல் செய்தால் நாளையே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்” என்று அறிவித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)