Advertisment

தாத்தாக்கள், அப்பாக்கள், மகன்களைத் தனித்தனியாக வரவழைத்த டாஸ்மாக்!

tasmac shop

Advertisment

பல்வேறு தடைகளுக்குப் பிறகு தமிழக அரசு நீதிமன்றத்தின்உத்தரவையடுத்து மே 7ஆம் தேதி காலை டாஸ்மாக் கடைகளைத் திறந்துள்ளது. அரசு விதிகளின்படி காலை 10 மணி முதல் ஒரு மணி வரை 50 வயதுக்கு மேல் உள்ள தாத்தாக்களுக்கும், ஒரு மணி முதல் 3 மணி வரை (40 - 50) அப்பாக்களுக்கும், 3 மணி முதல் 5 மணி வரை மகன்களுக்கும் (40க்கும் கீழ்) என நேரக் கட்டுப்பாடுகளை ஒதிக்கி வைத்திருந்தது.

அதன்படி டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு விடிய விடிய காத்திருந்து ஜல்லிக்கட்டு காளைகளை அடக்க காத்திருக்கும் வீரர்களைப் போல மதுப் பிரியர்கள் காத்திருந்தார்கள். ஜல்லிக்கட்டு காளைகளை வெளியே அனுப்பும் வாடிவாசலில் தடுப்பு அமைத்து இருப்பார்கள். அப்படி டாஸ்மார்க் கடைகளுக்கு முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மதுபான வீரர்களுக்கும் விடிவதற்கு முன்பே பலர் கடை முன்பு வரிசை கட்ட ஆரம்பித்தனர்.

tasmac shop

Advertisment

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எம். குன்னத்தூர் டாஸ்மார்க் கடையின் முன்பு பல மணி நேரம் கால்கடுக்க காத்திருந்து காத்திருந்து முதல் ஆளாகச் சரக்கு பாட்டில் வாங்கிக்கொண்டு ஜல்லிக்கட்டு காளையை அடக்கிய மாவீரனைப்போல் வெளியே வந்த பெரியவர் ஒருவரிடம், கடந்த நாற்பது நாட்களுக்கு மேலாக டாஸ்மார்க் கடைகள் திறக்கப்படவில்லை. அப்போது உங்களால் சரக்கு சாப்பிடாமல் எப்படி இருக்க முடிந்தது. ஊரடங்கு உத்தரவால் சாப்பாட்டுக்கு கஷ்டம், வேலை இல்லை, அதனால் வருமானம் இல்லை, பணம் இல்லை என்றெல்லாம் கூறினார்கள். இப்போது மட்டும் சரக்கு வாங்க எப்படிப் பணம் கிடைத்தது. இந்தச் சரக்கு குடிக்காமல் உங்களால் இருக்க முடியுமா? முடியாதா? இப்படிப் பலவிதமான கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம்.

‘40 நாட்களாக குடிக்கவில்லை. அதனால் பாதிப்பு எதுவும் இல்லாவிட்டாலும் கூட குடிக்காமல் இருப்பது மனரீதியாக பெரும் குறையாக இருந்தது. கடை திறக்க போகிறது என்றதும் சந்தோசம் ஏற்பட்டது. 40 நாட்கள் ஏக்கம் அந்தக் குறையைத் தீர்ப்பதற்கு நான் முதல் ஆளாகச் சென்று ஆதார் அட்டையைக் காட்டிவிட்டு இரண்டு பாட்டில்கள் வாங்கி வந்துள்ளேன். இது இன்றைக்கு மட்டும்தான் தாக்குப்பிடிக்கும். மேலும் சரக்குச் சாப்பிட வேண்டும் என்பதற்காக வீட்டுக்குத் தெரியாமல் 500 ரூபாய் பணத்தைப் பதுக்கி வைத்து இருந்தேன். இனிமேல் வேலைக்குச் சென்று அதன்மூலம் சரக்கு வாங்க முடியும். டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என்று போராட்டம் செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் பெயரளவுக்குச் செய்கிறார்களேயொழிய, உண்மையான அக்கறையோடு போராட்டம் நடத்தவில்லை. இப்படிப்பட்டவர்களில் நிறைய பேர் குடிப்பவர்களும் இருக்கிறார்கள். கட்சி சொல்வதற்காக இவர்கள் செய்யும் வெற்று போராட்டம். அதேபோன்று கடையை நிரந்தரமாக மூடினாலும் என்னைப் போன்றவர்களால் சரக்குச் சாப்பிடாமல் வாழவும் முடியும். அந்தத்தைரியமும் மனஉறுதியும் எனக்கு உள்ளது‘ என்கிறார் அந்தப் பெரியவர்.

மடப்பட்டு அருகேயுள்ள பருகம் பட்டு டாஸ்மாக் கடை முன்பு வேகாத வெயிலில் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு நீண்ட தூரம் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்தார்கள் மதுப் பிரியர்கள்.

tasmac shop

அவர்களில் 60 வயது கடந்த பெரியவர் ஒருவரிடம், கடந்த 40 நாட்களாக மளிகைச் சாமான், காய்கறி வாங்குவதற்குக் கடைகளில் முண்டியடித்துக்கொண்டு சீக்கிரம் ஊருக்குச் செல்ல வேண்டும், எங்கே நோய்ப் பரவி விடுமோ என்று பயந்துகொண்டு வீட்டிலேயே முடங்கிக் கிடந்த நீங்கள், இப்போது டாஸ்மாக் கடை வாசலில் மணிக்கணக்கில் கால் கடுக்க சரக்கு வாங்க எப்படிக் காத்திருக்க முடிகிறது? எனக் கேட்டோம்.

‘அந்தக் காலத்தில் திரைப்படம் பார்ப்பதற்குத் தியேட்டர்களுக்குச் செல்வோம். அங்கே கூட்டம் அதிகமாக வரும் என்பதற்காக பல மணி நேரம் முன்பாகவே சென்று வரிசையில் காத்திருப்போம். அப்போது பலசாலியாக உள்ளவர்கள் எங்கள் தோள் மீது ஏறி சென்று டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் எடுப்பவர்களும் உண்டு. இப்போது அந்த நினைவு தான் வருகிறது. என்ன செய்வது குடிப்பழக்கத்திற்கு ஆளான பிறகு பல மணி நேரம் காத்திருந்து பாட்டில் வாங்கிக் குடிக்க தோன்றுகிறது. இந்தப் பழக்கம் ஒருவித பைத்தியம். இந்த மது இல்லாமல் வாழ முடியாது. அந்த அளவிற்கு மதுவிற்கு அடிமையாக்கப்பட்டுள்ளோம். இதற்கு முழுமுதற் காரணம் நாங்கள் மட்டுமல்ல, அரசாங்கமும் தான்‘ என்று அரசு மீது பழி போடுகிறார் அந்த முதியவர்.

http://onelink.to/nknapp

டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக, கம்யூனிஸ்ட், பாமக மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்பினர் கருப்பு பேட்ஜ் அணிந்து பதாகைகளை ஏந்தியும் கோஷமிட்டனர். ஆனால் தமிழக அரசு அதனையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.

டாஸ்மாக் கடைகள் முன்பு காவல்துறையை நிற்கவைத்து மிகுந்த பாதுகாப்போடும் மரியாதையோடும் குடிமகன்களுக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்து வருகிறது. குடித்துவிட்டு வருபவர்களை வாயை ஊதச்சொல்லி, சாராய வாடை வந்தால் அவர்கள் மீது வழக்குப் போட்ட இந்தப் போலீஸ், இப்போது சாராய பாட்டில்கள் வாங்கிச் செல்வதற்கு மதுப்பிரியர்களுக்கு பாதுகாப்பு வழங்க நிற்க்கிறது. இதெல்லாம் காலத்தின் கோலம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

open tasmac shop ulundurpet
இதையும் படியுங்கள்
Subscribe