tasmac shop closed zone wise details

தமிழகம் முழுவதும் 500 மதுபான சில்லறை விற்பனை கடைகள் உடனடியாக மூடப்படும் எனத்தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisment

இது தொடர்பாக டாஸ்மாக் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரால் சட்டப் பேரவையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின் போது 500 மதுபான சில்லறை விற்பனை கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி 500 மதுபான சில்லறை விற்பனை கடைகளைக் கண்டறிந்து மூட கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த அரசாணையை செயல்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளில் 500 கடைகளைக் கண்டறிந்து அவற்றை நாளை முதல் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Advertisment

அந்த வகையில் தமிழ்நாட்டில் நாளை முதல் மூடப்பட உள்ள டாஸ்மாக் கடைகள் பற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி வருமானம் குறைந்த கடைகள், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் அமைந்துள்ள கடைகள், நீண்ட காலமாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் கடைகள், நீதிமன்ற வழக்குகள் தொடரப்பட்ட கடைகள், பல்வேறு மாவட்டங்களில் கட்டிட உரிமையாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் கடைகள் மூடப்பட உள்ளன. அதன்படி சென்னை மண்டலத்தில் 138 கடைகளும், மதுரை மண்டலத்தில் 125 கடைகளும், திருச்சி மண்டலத்தில் 100 கடைகளும், கோவை மண்டலத்தில் 78 கடைகளும், சேலம் மண்டலத்தில் 59 கடைகளும் மூடப்பட உள்ளன. மேலும் மூடப்படும் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அங்கிருந்து பணியிட மாற்றமும் செய்யப்பட உள்ளனர்.