Skip to main content

கடும் எதிர்ப்பையும் மீறி ஐந்தாண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட டாஸ்மாக்! போராட்டத்தில் மக்கள்

Published on 05/04/2022 | Edited on 05/04/2022

 

TASMAC opens after five years despite strong opposition! People in struggle

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகப் பெரிய ஊராட்சிகளில் ஒன்று கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கு 2 டாஸ்மாக் கடைகள் இயங்கியது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களும் போதைக்கு அடிமையாகுகிறார்கள் என்றும், மது அருந்துபவர்களால் பெண்களுக்கு அதிக தொல்லை என்றும் கூறி இரு டாஸ்மாக் கடைகளையும் மூடக் கோரி கடந்த 2017 மே 20ந் தேதி மாதர் சம்மேளனம் இந்திராணி தலைமையில் சுமார் 2 ஆயிரம் பெண்கள் திரண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அப்போது அங்கு பேச்சுவார்த்தைக்கு வந்த கலால் மற்றும் டாஸ்மாக், வருவாய்த் துறை அதிகாரிகள் அப்போதைய சட்டமன்ற உறுப்பினரும் தற்போதைய அமைச்சருமான மெய்யநாதன் முன்னிலையில் ஒரு மாதத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுவதாக உறுதி அளித்தனர். ஆனால், அதனை எழுதிக் கொடுக்க மறுத்து அங்கிருந்து வெளியேற முயன்றனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘எழுதிக் கொடுத்துவிட்டு போங்கள்’ என்று கேட்டனர். ஆனால், அதிகாரிகள், அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதில் ஆத்திரம் அடைந்த பெண்கள் அங்கிருந்து ஊர்வலமாகச் சென்று சம்மட்டி உள்ளிட்ட கனமான பொருட்களைக் கொண்டு 2 டாஸ்மாக் கடைகளையும் அடித்து உடைத்து சூறையாடினார்கள். 


அதனைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்தில் அப்போதைய மாவட்ட ஆட்சியர் கணேஷ், ஃபோன் மூலம் ‘இரு டாஸ்மாக் கடைகளும் மூடப்படுகிறது. இனிமேல் கொத்தமங்கலம் ஊராட்சிக்குள் டாஸ்மாக் கடைகள் திறப்பதில்லை’ என்று உறுதி அளித்தார். அதனையடுத்து கும்மியடித்து துள்ளிக் குதித்து இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடிய பெண்கள் முத்துமாரியம்மன் கோயிலுக்கு சென்று கண்ணீர் மல்க நன்றி கூறிச் சென்றனர். அதன் பிறகு மீண்டும் ஒரு முறை டாஸ்மாக் கடை திறக்க முயற்சி நடந்த போது, சாலை மறியல் போராட்டம் செய்தனர். அதன் பிறகு கிராம சபைக் கூட்டத்தில் டாஸ்மாக கடை வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மாரியம்மன் கோயில் செல்லும் வழியில் விவசாயப்பகுதியில் டாஸ்மாக்கடை திறக்கப்பட்டது. இதனையறிந்த திமுக ஊராட்சி மன்றத் தலைவி சாந்தி தலைமையில், தே.மு.தி.க மா.செ மன்மதன், சி.பி.ஐ, உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் என பலர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், டாஸ்மாக் கடை மூடவில்லை என்றால் ஊருக்குள் விளம்பரம் செய்து பெண்களை திரட்டி போராட்டம் செய்வோம் என்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்