/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hc-art_87.jpg)
சென்னை மற்றும் கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் மூலம் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது. அமலாக்கத்துறை இந்த விசாரணையை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணையில் இருந்த நிலையில் நீதிபதிகள் இருவரும் இந்த வழக்கில் இருந்து திடீரென விலகினர்.
அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு எஸ்.எம். சுப்பிரமணியன் மற்றும் ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் தற்போது விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (09.04.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விக்ரம் சௌத்ரி, “டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையின் போது வழக்கறிஞர்களைக் கூட சந்திக்க அனுமதிக்கவில்லை. டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தும்போது, அமலாக்கத்துறையினர் பெண் அதிகாரிகளை அழைத்து வரவில்லை. இந்த சோதனையின் போது சில அமலாக்கத்துறை அதிகாரிகள். டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகளைத் தூங்கவிடாமல் செய்துள்ளனர். இது மனித உரிமையை மீறும் செயல் ஆகும்.
கணினி சேமிப்பகமான ஹார்ட் டிஸ்க், அதிகாரிகளின் செல்போனில் உள்ள தகவல்களைப் பதிவிறக்கம் செய்து அமலாக்கத்துறையினர் எடுத்துச் சென்றுள்ளனர். எனவே இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையிடம் உள்ள ஆவணங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும். அமலாக்கத்துறை நீதியின் பாதுகாவலன் இல்லை. இது விசாரணை அமைப்பு தான். எனவே அமலாக்கத்துறை சட்டத்தை மதிக்காமல் விருப்பம் போல் செயல்பட முடியாது. சோதனையின் போது ரகசியம் என்று கூறிய அமலாக்கத்துறையினர் எந்த தகவலையும் வழங்க மறுத்துவிட்டனர். சோதனை முடிந்த பின்னர் அறிக்கை வெளியிட்டதன் நோக்கம் என்ன?” என வாதிட்டார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 15ஆம் தேதிக்கு (15.04.2025) ஒத்திவைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)