
போராட்டத்தில் ஈடுபடுவதற்காக புதுக்கோட்டையில் இருந்து சென்னை பயணிக்க இருந்த டாஸ்மாக் ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்கள் சென்னை செல்வதற்கு ஆயத்தமாகி புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே ஒன்று திரண்ட நிலையில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், 'அத்துமீறி காவல்துறையினர் எங்களை கைது செய்துள்ளனர். ஜனநாயக முறையில் எங்களுடைய உரிமைகளை கேட்டுப் போராட கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காவல்துறையும் அரசும் எங்கள் போராட்டத்தை அனுமதிக்கவில்லை. நாங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தோம் ஆனால் கைது செய்து விட்டனர்' என தெரிவித்தனர்.