Skip to main content

நூதன கொள்ளை -டாஸ்மாக் ஊழியர்கள் கொதிப்பு!

Published on 10/05/2020 | Edited on 10/05/2020


கரோனா ஊரடங்கு உத்தரவின்பேரில் 43 நாள்களாக மூடிக்கிடந்த டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்து, மது பிரியர்களின் வாழ்த்துகளையும், ஒட்டுமொத்த குடும்பத் தலைவிகளின் வசவுகளையும் ஒருசேர வாரிக் கட்டிக்கொண்டது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு. உயர்நீதிமன்ற உத்தரவால் கடைகள் திறக்கப்பட்ட வேகத்திலேயே மூடப்பட்டாலும், திறந்திருந்த இரண்டே நாளில் 'ஜெ! ஜெ!' என்று திருவிழாக் கூட்டமாகக் காட்சி அளித்தன டாஸ்மாக்குகள்.

 

tasmac employees angry


மே 7ம் தேதி மட்டும் ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 172 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்றுத் தீர்ந்துள்ளன. முதல் நாளில் முண்டியடித்தக் கூட்டம் அளவுக்கு மறுநாள் இல்லாவிட்டாலும் கூட, அன்றும் 125 கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனை நடந்துள்ளன. இரண்டு நாளில் சுமார் 300 கோடி ரூபாய்க்கு கல்லா கட்டியிருக்கிறது கலால்துறை. மதுபானங்களை வாங்கியவர்கள் தேர்தலில் வெற்றி பெற்ற பெருமிதத்துடன் கையில் மது புட்டிகளை பிடித்துக்கொண்டு பீடு நடை போட்டனர்.

கரோனா பொதுமுடக்கத்தால் யாருக்கும் வேலை இல்லை; அதனால் கையில் பணப்புழக்கம் இல்லை என்று பொதுவாக எல்லோரும் புலம்பித் தள்ளினாலும் டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொருவர் கையிலும் 500, 2000 ரூபாய் தாள்கள் தாராளமாக புழங்கின. வீடுகளில் குடும்பத் தலைவிகள் அஞ்சறை பெட்டிகளிலும், அரிசி பானைக்குள்ளும் ஒளித்து வைத்திருந்த பணமெல்லாம் பாழும் மதுவுக்கு தாரை வார்த்த கணவர்களை நினைத்து பெண்கள் புலம்பும் காணொலிப் பதிவுகளும் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்தன.

 

tasmac


இது ஒருபுறம் இருக்க, டாஸ்மாக் கடைகளை திறந்ததன் மூலம் எடப்பாடி அரசு கல்லா கட்டியது என்றாலும், மதுக்கடை ஊழியர்களும் கணிசமான அளவுக்கு வாரிச்சுருட்டி இருக்கிறார்கள். வழக்கமாக மது புட்டிக்கு 5 ரூபாய் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வதும், பில் போடாமல் வியாபாரம் செய்வதும் எழுதப்படாத சட்டமாகிவிட்ட நிலையில், இந்தமுறையோ புட்டிக்கு 20 முதல் 50 ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து விற்றுள்ளனர். இதில், டாஸ்மாக் பணியாளர்களுடன் ஆளுங்கட்சி புள்ளிகளும் ரகசிய கூட்டணி வைத்து நூதன கொள்ளையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக சேலத்தைச் சேர்ந்த டாஸ்மாக் பணியாளர்கள் தொழிற்சங்க நிர்வாகிகள் இருவர், பெயர், படம் வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் நம்மிடம் பேசினர்.

''டாஸ்மாக் மதுபானக் கடைகளை மே 7ம் தேதி முதல் திறக்கலாம் என்று திடுதிப்பென்று அரசு சொல்லிவிட்டது. அவ்வளவுதான். அந்த நிமிடத்தில் இருந்து எல்லா ஊரிலும் டாஸ்மாக் மேலாளர்கள் டாஸ்மாக் சூப்பர்வைசர்களை பாடாய்ப்படுத்தி எடுத்தி விட்டனர். மதுபானம் வாங்க வரும் ஒவ்வொருவரும் 6 அடி இடைவெளியில் நிற்க வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும், அதற்கேற்ப தடுப்புக்கட்டைகள் அமைக்க வேண்டும் என்றெல்லாம் அடுக்கடுக்காக உத்தரவுகளை பிறப்பித்தனர்.

 

tasmac


மதுபானம் வாங்க வரும் நபர்களும் கைகளை கிருமிநாசினி திரவம் கொண்டு கழுவ வேண்டும் என்றார்கள். ஆனால் இதற்கெல்லாம் செலவுக்கு எங்கே போவார்கள் என்பதைப்பற்றி டாஸ்மாக் அதிகாரிகள் கொஞ்சமும் நினைக்கவில்லை. வாடிக்கையாளர்களை வரிசையில் ஒழுங்கு படுத்துவதற்காக தடுப்புக்கட்டைகள் அமைத்தது, பிளீச்சிங் பவுடர் போட்டது, பணியாளர்களின் கைகளுக்கு கிளவ்ஸ், முகக்கவசம், சைனிடைசர் வாங்கியது, காவல்துறையினர் அறிவிப்பு வெளியிடுவதற்காக ஒலிபெருக்கி வசதி செய்தது, பாதுகாப்புப்பணிக்காக வந்த காவல்துறையினருக்கு மதிய உணவு, டீ வழங்கியது, அவர்களுக்கு மாமூல் கொடுத்தது என இரண்டே நாளில் 16 ஆயிரம் ரூபாய் செலவு செய்திருக்கிறோம்.

ஒவ்வொரு கடைக்கும் இந்த செலவு கண்டிப்பாக ஆகியிருக்கும். அப்படி எனில், சேலம் மாவட்டத்தில் திறக்கப்பட்ட 168 டாஸ்மாக் கடைகளில் ஆன செலவைக் கணக்கிட்டாலே 27 லட்சம் ரூபாய் வந்துவிடும். எனில், தமிழ்நாடு முழுவதும் 3000 கடைகளுக்கு எவ்வளவு தொகை குறுக்கு வழியில் புழங்குகிறது என்று கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள். இதுதவிர உள்ளூர் ஆளுங்கட்சியினர், காவல்துறையினர் என பலரும் ஓசியில் சரக்கு கேட்டு வருகின்றனர். இதையெல்லாம் எந்தக் கணக்கில் எழுதுவது?

 

yஹ



இந்த செலவுகளை ஈடுகட்ட வேறு வழியின்றி நாங்களும் மதுபானங்களை பாட்டிலுக்கு 20 முதல் 50 ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து விற்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். இதில் ஆளுங்கட்சியின் வார்டு செயலாளர்களுக்கும், காவல்துறையினருக்கும், உள்ளூர் ரவுடிகளுக்கும் மாதாந்திரம் பங்கு கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தேவையில்லாமல் பிரச்னை செய்வார்கள். அரசே எங்களை திருடச் சொல்கிறது. அதிகாரிகள்தான் எங்களை திருடச்சொல்லி மறைமுகமாக ஊக்குவிக்கிறார்கள். கூடுதல் தொகைக்கு மது விற்றதாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட பணியாளரை சஸ்பெண்ட் செய்கிறார்கள். அவரே 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், அதே கடையில் மீண்டும் பணியமர்த்தி விடுகின்றனர்,'' என்றனர்.

 

tasmac


இதுகுறித்து சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வேடியப்பனிடம் கேட்டபோது, ''டாஸ்மாக் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் வரிசையில் வருவதற்கு வசதியாக தடுப்புக்கட்டைகள் அமைக்கப்பட வேண்டும் என்பது அரசின் உத்தரவு. அதற்கான செலவுகளை எப்படி ஈடுகட்டுவது என்பதெல்லாம் எங்களுக்கு எந்த வழிகாட்டுதலும் இல்லை. அதை பொதுப்படையாகவே கூட்டத்தில் வைத்து சொல்லி விட்டோம். டாஸ்மாக் பணியாளர்கள் யாராவது அப்படி உங்களை கேட்கச் சொல்லி நீங்கள் கேட்கிறீர்களா எனத் தெரியவில்லை. நான் சில அறிவுரைகள் வழங்கும்போது என்னிடத்தில் எந்த ஊழியரும் இதைப்பற்றி கேள்வி எழுப்பவில்லை,'' என்று பட்டும்படாமலும் சொல்லி முடித்தார்.

ஊழலின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் தமிழக அரசு, கீழ் பணியாற்றும் எல்லா ஊழியர்களையும் நன்றாகவே பதில் சொல்ல பழக்கியும் வைத்திருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்