ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை 2 மணிநேரம் திறக்கக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மார்ச் 25- ஆம் தேதி முதல் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு தற்போது மே 3- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இது மதுபிரியர்களுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்துவதால், கடைகளைக் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரமாவது திறந்து வைக்க உத்தரவிட வேண்டும் எனச் சென்னையைச் சேர்ந்த ஸ்டாலின் ராஜா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/madras3333_2.jpg)
அந்த மனுவில், திடீரென மது அருந்துவதை நிறுத்தும் போது, இதயத்துடிப்பு அதிகமாகி சுவாசப் பிரச்சினையை ஏற்படுத்துவதுடன், மூளையையும் பாதிக்கச் செய்யும். பல இடங்களில் மதுபானக் கடைகள் உடைக்கப்பட்டதாக மாநிலம் முழுவதும் 22 சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
கள்ளச்சந்தையில் மது பானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதால் கள்ளச்சாராயம், மெத்தனால் மற்றும் வார்னிஷ்களைக் குடித்து சிலர் மரணமடைந்துள்ளனர். அதனால், டாஸ்மாக் கடைகளைக் குறைந்தபட்ச நேரத்துக்குத் திறக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இந்த மனு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அசாம் மற்றும் கேரளா மாநிலங்களில் மதுக்கடைகளைத் திறக்க அனுமதித்த உத்தரவுகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அரசுத்தரப்பு வழக்கறிஞர், டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதிக்க முடியாது என வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்று நீதிபதிகள் டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif.gif)