Tarna  at night collector's office! Revenue official talking to seniors!

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரர்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(75). இவரது மனைவி சாந்தகுமாரி(65). மற்றும் இவர்களின் மகள் தேவசேனா(40). இவர்கள் மூவரும் நேற்று இரவு 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறை அலுவலர் பொதுமேலாளர் சுந்தரராஜன், அந்த தம்பதியிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

Advertisment

அவரிடம் முதியவர் ராஜமாணிக்கம், “எனக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். எங்களுக்கு சொந்தமான நிலம் நல்லாம்பாளையம் கிராமத்தில் பல ஏக்கர் உள்ளது. அந்த நிலத்தை எனது மகன் பிரபாகரனுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு நான் தான செட்டில்மென்ட் மூலம் முழுவதுமாக எழுதிக் கொடுத்துள்ளேன். நிலத்தை பெற்றுக்கொண்ட பிறகு அவர் எங்களை தனியாக விட்டுவிட்டு சென்றுவிட்டார். கடந்த ஓராண்டாக எங்களை அவர் கவனிப்பதில்லை. வந்து பார்ப்பதுமில்லை. சாப்பாட்டிற்கும் மருத்துவச் செலவிற்கும் தவிக்கிறோம். இந்த வயதான காலத்தில் வேலை செய்து உழைத்து சம்பாதிக்கக்கூடிய அளவுக்கு எங்களுக்கு உடலில் தெம்பில்லை. எனவே, நான் எனது மகன் பெயருக்கு தானமாக எழுதிக் கொடுத்த நிலத்தில் இரண்டு ஏக்கரை மட்டும் எங்களிடம் திருப்பிக் கொடுத்தால் போதும். அதைக்கொண்டு நான், எனது மனைவி, மகள் மூவரும் வாழ்ந்து கொள்கிறோம். இதுதொடர்பாக கடந்த ஒரு ஆண்டாக கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என பலரிடமும் மனு கொடுத்துள்ளேன். ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

Advertisment

இதையடுத்து வருவாய்த் துறை அலுவலர் சுந்தர்ராஜன், விரைவில் உங்களுக்கு உங்கள் மகனிடம் இருந்து நிலத்தை எடுத்துக் கொடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். அதன்பேரில் அவர்கள் மூவரும் இரவு 11 மணியளவில் புறப்பட்டுச் சென்றனர்.