பணிச்சுமை காரணமாக டான்சி நிறுவன ஊழியர் எடுத்த விபரீத முடிவு

tansi company employee  lost their life due to workload

ஈரோடு, மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (53). இவரது மனைவி ராதா (48). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவரும் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். ரங்கசாமி கோவையில் உள்ள தமிழ்நாடு அரசின் டான்சி நிறுவனத்தில் போர்மேனாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த சில மாதங்களாகவே தனக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதாக ரங்கசாமி தனது மனைவியிடம் கூறி புலம்பி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம்(29.11.2023) காலையில் ரங்கசாமி பணிக்குச்சென்றார். மனைவி ராதா அவர்களது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். மீண்டும் மாலையில் ராதா வீட்டுக்கு வந்தபோது வீடு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்திருக்கிறது. ரங்கசாமியின் செல்போனுக்கு அழைத்தபோது அவர் போனை எடுக்கவில்லை.

இதையடுத்து சந்தேகமடைந்த ராதா, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன், மாடிக்குச் சென்று பார்த்தபோது, அங்குள்ள குளியல் அறையில் நைலான் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் ரங்கசாமி இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே ரங்கசாமி இறந்துவிட்டதாகத்தெரிவித்தார். டான்சி நிறுவனத்தின் உயர் அதிகாரி செய்த தொந்தரவால்தான் ரங்கசாமி தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

employees Erode police
இதையும் படியுங்கள்
Subscribe