
அரியலூரில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கட்டாய மதமாற்றம் செய்ய கொடுக்கப்பட்ட வற்புறுத்தல் காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
பாஜகவை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியின் வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார். 'மதமாற்றம் செய்ய அழுத்தம் கொடுத்ததால் அரியலூரைச் சேர்ந்த மாணவி விஷம்குடித்து மரணம் அடைந்துள்ளார். நடுநிலையான விசாரணை நடைபெற வேண்டும். உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்பொழுது தஞ்சை மாவட்ட எஸ்.பி ரவுளிபிரியா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''நாங்கள் செய்த முதற்கட்ட விசாரணையில் மதமாற்றம் தொடர்பான எந்த ஒரு குற்றச்சாட்டும் வரவில்லை. அவ்வாறு இருந்தால் விசாரணை செய்வோம். ஆனால் முதற்கட்ட விசாரணையில் அப்படி எந்த ஒரு குற்றச்சாட்டும் வரவில்லை. அந்தப் பெண்ணுடைய தகவல்கள், அவர் படித்த பள்ளி பெயர்களைக் கூட சொல்லக்கூடாது. அவருடைய புகைப்படம், பெயர், அவருடைய பெற்றோர் பெயர், ஊர், விலாசம் வெளியான வீடியோவில் தெரிய வருகிறது. எனவே அதை சமூக வலைத்தளங்கள், செய்தித்தாள்கள் என எந்த வடிவில் பரப்பினாலும் அதுகுற்றம். அரியலூர் மாணவி மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதாக முதல்கட்ட விசாரணையில் எந்த தகவலும் இல்லை. தற்பொழுது கொடுக்கப்பட்டுள்ள பெட்டிஷன் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது'' என்றார்.