Tanjore District Collector announcement Holiday for schools

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் இன்று (18.11.2024) வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் பகுதியில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் அதாவது இன்று காலை 10 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே போன்று தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் தொடர் கனமழை காரணமாகத் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (18.11.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது தொடர்பாக அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களே முடிவெடுத்துக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அஷா அஜித் அறிவுறுத்தியுள்ளார்.