/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_913.jpg)
தஞ்சாவூரில் இருந்து பூதலூர் செல்லும் சாலையில் 4 கி.மீ. தொலைவில் உள்ளது களிமேடு கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 150 ஆண்டுகள் பழமையான அப்பர் மடம் உள்ளது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல 94 ஆம் ஆண்டு சதயவிழா நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இத்திருவிழாவில் இரவில் மின் அலங்கார சப்பரத்தில் அப்பர் படம் வைத்து இழுத்து வரப்பட்டது. களிமேடு கிராமத்திலுள்ள நான்கு வீதிகளிலும் சப்பரத்தை பக்தர்கள் இழுத்து வந்தனர். வீதிகளில் உள்ள வீட்டுக்கு வீடு தேங்காய் பழம் வைத்து படையல் செய்து வழிபட்டனர்.
இன்று புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு கீழத் தெருவிலிருந்து முதன்மைச் சாலைக்கு வந்து தேர் திரும்பியபோது, சப்பரத்தில் அலங்காரத்திற்காக கட்டப்பட்டிருந்த இரும்பு குழாய் ஒன்று மேலே சென்ற உயரழுத்த மின் கம்பியில் உரசியுள்ளது. கீழே மின் விளக்குகளுக்காக அதிக திறன் கொண்ட ஜெனரேட்டரும் இழுத்து வரப்பட்ட நிலையில் இரு மின்சாரமும் ஒன்றுக்கொன்று உரசி அதிக மின் அழுத்தத்தால் மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதில் சப்பரம் இழுத்து வந்த பக்தர்கள் மீதும், சுற்றி இருந்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இவர்களில் களிமேடு கிராமத்தைச் சேர்ந்த எம். மோகன் (22), முன்னாள் ராணுவ வீரர் கே. பிரதாப் (36), ஏ. அன்பழகன் (60), இவரது மகன் ராகவன் (24), நாகராஜ் (60), ஆர். சந்தோஷ் (15), டி. செல்வம் (56), எம். ராஜ்குமார் (14), ஆர். சாமிநாதன் (56), ஏ. கோவிந்தராஜ் ஆகியோர் உயிரிழந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-3_271.jpg)
மேலும் பலத்த காயமடைந்த எம். ரவிச்சந்திரன் (48), ஆர். கலியமூர்த்தி (40), கே. ஹரிஷ் ராம் (10), எம். நித்தீஷ் ராம் (13), ஏ. மாதவன் (22), டி. மோகன் (54), என். விஜய் (23), எம். அரசு (19), ஜி. விக்கி (21), திருஞானம் (36), வி. ஹரிஷ் (11), மதன் மனைவி சுகுந்தா (33), பி. கௌசிக் (13), எஸ். பரணி (13) ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் பரணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதாவது 11 பேர் உயிரிழந்தனர். 15 பேர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதையடுத்து களிமேடு கிராமத்திற்கு சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3140.jpg)
இதேபோல திருச்சி மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் சொன்னார். பிறகு விபத்து குறித்து ஆய்வு செய்து வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் ஏ. கயல்விழி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா கந்தபுனேனி உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சப்பரம் நிலைக்கு வருவதற்கு 15 நிமிடங்கள் இருந்த நிலையில் இச்சம்பவம் நடந்திருப்பது வேதனை அளிப்பதாக கூறுகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)