ADVERTISEMENT

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டை தாக்க முற்பட்ட வழக்கு! -குண்டர் சட்டம் செல்லாது என தீர்ப்பு!

11:20 PM Apr 26, 2020 | kalaimohan

துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்தில் பெட்ரோல் குண்டு வீச முயன்றதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 10 பேரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவு செல்லாது என தமிழ்நாடு அறிவுரை கழகம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையில் கடந்த ஜனவரி 26-ம் தேதி அதிகாலையில் மோட்டார் சைக்கிள்களில் வந்த சிலர், ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முற்பட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், குண்டு வீச வந்தவர்களை விரட்டியதால், அவர்கள் தப்பியோடினர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மயிலாப்பூர் காவல்துறை, அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள்களின் பதிவு எண்களை வைத்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சக்தி, தீபன், கண்ணன், ஜனார்த்தனன், வாசுதேவன், பாலு, சசிக்குமார், தமிழ், குமரன், பிரசாந்த் ஆகிய 10 பேரை கைது செய்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதையடுத்து, கைது செய்யப்பட்ட 10 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் பிப்ரவரி 20-ம் தேதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து, 10 பேரின் உறவினர்களும் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், 10 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பித்த போது, முறையான வழிமுறைகள் பின்பற்றப்பட்டதா? என்பது குறித்து, சென்னை ஆட்சியர் அலுவலக வாளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அறிவுரை கழகம் விசாரணை நடத்தியது. இந்த வழக்கை விசாரித்த அறிவுரை கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழக உறுப்பினர்கள் 10 பேரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவு செல்லாது என உத்தரவிட்டது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT