Tamizhaga Vazhvurimai Katchi velmurugan pressmeet at neyveli

Advertisment

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் நெய்வேலியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, "மத்திய பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் தமிழக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பைதட்டிப் பறித்து வருகிறது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. இந்தியா, மண்ணின் மைந்தர்களைப் புறக்கணித்து வட இந்தியர்களை உயர் பதவியில் நியமனம் செய்துவருகிறது. குறிப்பாக 259 பொறியாளர் பணியிடங்களுக்காக அண்மையில் தேர்வு நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்வில் 1,585 பேர் தேர்வாகி உள்ளதாக என்.எல்.சி. இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 10 பேர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்வு எதன் அடிப்படையில் நடத்தப்பட்டது. இந்த தேர்வு நடத்துபவர்கள் யார்? இந்த தேர்வில் தமிழகத்தில் லட்சக்கணக்கானபடித்த இளைஞர்கள் இருக்கும்போது தமிழர்கள் தேர்வு பெறாமல் போனது எப்படி? என்.எல்.சி. நிறுவனத்திற்கு வீடு நிலம் கொடுத்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்கள் 10,000 பேர் ஒப்பந்தத் தொழிலாளியாகவும், அப்ரண்டிஸ் பயிற்சி தொழிலாளர்களாகவும் பணியாற்றுகின்றனர். உயிரிழந்தவர்களின் வாரிசுகள் வேலைவாய்ப்பு கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு வேலை வழங்காமல் என்.எல்.சி நிறுவனம் தொடர்ச்சியாகப் புறக்கணித்து வருகிறது.

Advertisment

இந்த தேர்வை உடனடியாக ரத்து செய்யவேண்டும். இந்த 259 பதவிகளுக்கு என்.எல்.சி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழகத்தில் தகுதியான தேர்வாளர்கள் கிடைக்கவில்லை என்றால் என்.எல்.சி. நிர்வாகம் வெளி மாநிலத்தில் இருந்து பணியாளர்களைத் தேர்வு செய்து கொள்ளலாம். என்.எல்.சி. நிர்வாகம் வீடு நிலங்களைக் கையகப்படுத்திய போது பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. தமிழக அரசு இவ்விஷயத்தில் கள்ள மவுனம் சாதிப்பது நியாயம் அல்ல. ஏனென்றால் தமிழக அரசின் வருவாய்த்துறை தான் வீடு நிலங்களைக் கையகப்படுத்தி என்.எல்.சி.க்கு வழங்கியுள்ளது.

எனவே தமிழக முதல்வர் இதனைத் தடுத்து நிறுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வரும் பிப்ரவரி 16-ஆம் தேதி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு மாபெரும் தொடர் போராட்டம் நடத்தப்படும். தமிழக சட்டமன்றத்தில்,முதல்வர் இதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.