
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் நாராயணி. இவர் கடந்த 10 ஆம் தேதி கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது பூர்வீக சொத்து 78 சென்ட் உள்ளது. இதன் மதிப்பு சுமார் 5 கோடி ஆகும். இந்த நிலத்தை விற்பது தொடர்பாக சில சிக்கல்கள் இருந்து வந்தது. இதனால் இந்த நிலத்தை விற்பதற்கு நண்பர் சதீஷ் மற்றும் இடைத்தரகர் பிரகாஷ்ராஜை அணுகினேன். அதற்கு இவர்கள் இருவரும் இந்த சிக்கலை தீர்த்து வைப்பதற்காக கமிஷன் அடிப்படையில், பாஜக நெசவாளர் பிரிவு மாநிலச் செயலாளர் மின்ட் ரமேஷ் (வயது 51) என்பவரை அணுகலாம் என்று சொன்னார்கள். அதன் அடிப்படையில் மின்ட் ரமேஷை அணுகினோம்.
இந்நிலையில் கடந்த மாதம் நான் வேறு ஒருவர் உதவியின் மூலம் சுமார் 5 கோடிக்கு அந்த நிலத்தை விற்றுவிட்டேன். இதனைத் தெரிந்து கொண்ட ரமேஷ் தனது கூட்டாளியான நாகர்கோவில் மகேஷ் (வயது 47) என்பவருடன் எனது வீட்டிற்கு வந்து என்னிடம் இருந்த 45 லட்சத்தை பறித்துச் சென்றனர். மேலும் இதுகுறித்து புகார் கொடுத்தால் கொலை செய்து விடுவேன் என எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார் எனப் புகாரில் தெரிவித்து இருந்தார். அதேபோல் இடைத்தரகர் பிரகாஷ்ராஜ் கடந்த 18 ஆம் தேதி கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் மின்ட் ரமேஷ் மற்றும் கூட்டாளியான நாகர்கோவில் மகேஷ் ஆகிய இருவரும் நேரில் வந்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிவித்து இருந்தார்.
கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் இந்த இரு புகார்களின் அடிப்படையில் மின்ட் ரமேஷ் மற்றும் நாகர்கோவில் மகேஷ் இருவரையும் கைது செய்தனர். இதுமட்டுமின்றி மின்ட் ரமேஷ் மற்றும் நாகர்கோவில் மகேஷ் மீது தலா 2 கொலை வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளன. இந்நிலையில் மின்ட் ரமேஷின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் மதுரவாயலில் நடந்தது. இதில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.