thameem

Advertisment

நாகை எம்.எல்.ஏ., தமிமுன் அன்சாரி தனது ஒரு மாத சம்பளத்தை கேரள நிவாரண நிதிக்கு வழங்கினார். மேலும் அவர் நிவாரண உதவிப் பொருள்களை அளிக்குமாறு தொகுதி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, நாகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி,

எமது மனிதநேய ஜனநாயக கட்சியினரின் அறிவுறுத்தலின் படி கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது 1 மாத எம்.எல்.ஏ., சம்பளத்தை நிவாரண உதவிக்காக வழங்குகிறேன். மேலும் நாகப்பட்டிணம் தொகுதிக்குட்பட்ட மக்கள் கேரளவுக்காக தங்களது நிவாரண உதவிகளை வழங்க வேண்டுகிறேன்.

Advertisment

கைலிகள், நைட்டிகள், குழந்தைகளுக்கான ஆடைகள், நாப்கீன்கள், பிஸ்கட் பெட்டிகள் போன்ற அத்தியாவசிய பொருள்களை காலை 11 முதல் மாலை 7 மணி வரை நாகை எம்.எல்.ஏ., அலுவலகத்தில் இன்றிலிருந்து 1 வாரத்திற்குள் வழங்கலாம். பழைய பொருள்களை தவிர்க்க வேண்டுகிறோம்.

இப்பொருள்கள் நாகையிலிருந்து ரயில் மூலம் கேரளா அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். கேரளாவின் வெள்ளப் பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்து, துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எல்லா உதவிகளையும் கேரள மக்களுக்கு வழங்க வேண்டும். தற்போது வெறும் 500 கோடியை மட்டும் மத்திய அரசு கேரளாவுக்கு ஒதுக்கியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. மத்திய அரசு மாற்றான் தாய் மனநிலையில் செயல்படுவதாக சந்தேகம் வருகிறது. அங்கு 20 ஆயிரம் கோடிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே முதல் கட்டமாக 2 ஆயிரம் கோடி ரூபாயை வழங்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

கொள்ளிடத்தில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், தேவைக்கு அதிகமான நீர் வீணாக கடலில் கலக்கிறது. ஆனால் காவிரி கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள். இதற்கு மணல் கொள்ளையும் ஒரு காரணமாகும். எனவே காவிரி ஆற்றுபடுகையில் மணல் அள்ளுவதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். கொள்ளிடத்தில் வீணாக கடலில் கலக்கும் நீரை உட்பகுதிகளுக்கு திருப்ப பொதுப் பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisment

அதுபோல் காவிரி டெல்டா மாவட்டங்களில் இரண்டாம் கட்டமாக குடிமராமத்து பணிகளை முன்னெடுக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் ஆறு, ஏரி, கால்வாய் மற்றும் குளங்களை தூர் வார வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இந்த ஆண்டில் 1000 கோடி ரூபாயை ஒதுக்கி 62 தடுப்பணைகளை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்திருப்பதை வரவேற்கின்றேன். தஞ்சை, நாகை, திருவாருர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.