
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர், சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றுவருகிறது. மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களில் அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுவருகின்றனர். மேலும், சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் அமைச்சர்கள் விளக்கமளித்துவருகின்றனர்.
அந்த வகையில், இன்றைய விவாதத்தின்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தனி தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தைக் கண்டித்து, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இருப்பினும், மதிமுக, விசிக, தவாக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்தை மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சியின் பொதுச்செயலர் தமிமுன் அன்சாரி வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஒன்றிய அரசின் வேளாண் விரோத 3 சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காகவும், இச்சட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறும் அறிவிப்புக்காகவும் தமிழக அரசையும், முதல்வரையும் மஜக சார்பில் பாராட்டி நன்றி கூறுகிறோம்’ என்று பதிவிட்டுள்ளார்.