/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/993_123.jpg)
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 7 நாட்களாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது.
காசாவிற்கு கொடுக்கும் பதிலடி ஹமாஸ் அமைப்பிற்கு மட்டுமல்ல, நமது எதிரிகள் கூட மறக்க முடியாத நினைவாக இருக்க வேண்டும் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவிற்கு நீர், மின்சாரம் உள்ளிட்டவற்றை இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் இஸ்ரேலின் தாக்குதலால் காசா நகரமெங்கும் மரண ஓலம் கேட்டுக்கொண்டிருக்கிறது; கட்டடங்கள் நிலைகுலைந்துள்ளன. இதனிடையே ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதாலும், ஏவுகணைமூலம் தாக்குதல் நடத்துவதாலும் ஜெருசலேம் மற்றும் அதனைசுற்றியுள்ள நகரங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலில் இருக்கும் வெளிநாட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட நாடுகள் முடுக்கி விட்டுள்ளன.
அந்த வகையில் இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் என்ற பெயரில் மீட்பு பணிகள்நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு முதல் மீட்பு விமானம் இன்று காலை டெல்லி வந்தது. இந்தியா வந்த 212 பேரில் தமிழகத்தை சேர்ந்த 21 பேரும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதில் 14 பேர்சென்னை விமான நிலையம் வந்தனர். எஞ்சிய 7 பேர் டெல்லியில் இருந்து நேராக கோவை சென்றுள்ளனர். இஸ்ரேலில் மொத்தம் 114 தமிழர்கள் இருக்கின்றனர். அடுத்தடுத்துவரும் விமானங்களில் அவர்களும் அழைத்துவரப்பட உள்ளனர். மத்திய அரசின் ஆபரேஷன் அஜய் திட்டத்தில் தமிழக அயலக நலத்துறையினரும் சேர்ந்து செயல்பட்டு வருகின்றனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)