
ஸொமேட்டோ செயலியில் விகாஷ் என்ற நபர் உணவு ஆர்டர் செய்த நிலையில், அவர் ஆர்டர் செய்த உணவு அவருக்கு வழங்கப்படவில்லை. இதனால் ஸொமேட்டோவின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்ட அவர், இதுதொடர்பாக புகாரளித்ததுடன் பணத்தைத் திரும்ப அளிக்குமாறு கேட்டுள்ளார்.
இதுதொடர்பான உரையாடலின்போது, வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர், இந்தி நமது நாட்டின் தேசிய மொழி என்றும், எனவே அனைவரும் அதைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூகவலைதளங்களில் ஸொமேட்டோ நிறுவனம் கடுமையாக விமர்சிக்கப்பட்டதுடன், #RejectZomato என்ற ஹாஷ்டேக்க்கும், #HindiIsNotNationalLanguage என்ற ஹாஷ்டேக்கும் ட்ரெண்டாக தொடங்கியது. அதேபோல் #Hindi_Theriyathu_Poda என்ற ஹாஷ்டேக்கும் ட்ரெண்டானது.
இந்நிலையில் சமூகவலைதளங்களில் எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து, தனது வாடிக்கையாளர் சேவை மைய ஊழியரின் செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது ஸொமேட்டோ. மேலும், இந்தியை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறிய அந்த ஊழியரையும் பணி நீக்கம் செய்துள்ளது.
இதுதொடர்பாக ஸொமேட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
‘வணக்கம் தமிழ்நாடு! எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர்க்கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரைப் பணிநீக்கம் செய்துள்ளோம். பணிநீக்கம் என்பது சரியான நெறிமுறை என நம்புகிறோம். மேலும் மக்களின் உணர்வுகளுக்கு எதிராகக் கருத்தைப் பகிரக்கூடாது எனத் தெளிவாக நாங்கள் எங்கள் முகவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம்.
இந்த வாடிக்கையாளர் சேவை முகவரின் அறிக்கைகள், மொழி அல்லது சகிப்புத்தன்மை குறித்த நிறுவனத்தின் நிலைப்பாட்டைக் குறிக்கவில்லை. ஒரு நிறுவனமாக, நாங்கள் முழு பயன்பாட்டிற்காகத் தமிழ் செயலியை உருவாக்குகிறோம். நாங்கள் ஏற்கனவே மாநிலத்திற்கான தமிழில் சந்தைப்படுத்தல் முயற்சிகளை உள்ளூர் மயமாக்கியுள்ளோம் (எ.கா. நாங்கள் மாநிலத்திற்கான உள்ளூர் பிராண்ட் அம்பாசிடராக அனிருத்தை தேர்வு செய்துள்ளோம்). மேலும், கோயம்புத்தூரில் ஒரு உள்ளூர் தமிழர் கால் சென்ட்டர் / சர்வீஸ் சென்ட்டரை உருவாக்கும் பணியில் உள்ளோம்.
உணவு மற்றும் மொழி ஒவ்வொரு மாநிலத்தின், கலாச்சாரத்தின் இரண்டு அடித்தளங்கள் என்பதை நாங்கள் புரிந்துள்ளோம். அவை இரண்டையும் நாங்கள் முழுமையாக உணர்ந்துள்ளோம் என மீண்டும் தெரிவித்துக்கொள்கிறோம்.’ இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஸொமேட்டோ தனது ட்விட்டர் பதிவில், தங்களது வாடிக்கையாளர் சேவை மைய முகவரின் நடத்தைக்கு மன்னிப்பு கேட்பதாகவும், தயவு செய்து ஸொமேட்டோவைப் புறக்கணிக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'வாடிக்கையாளர்களுக்கு இந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழர்களுக்கு யாரும் யார் இந்தியர்கள் என்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட மொழிகளில் மட்டுமே சில நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை செயல்பட்டுவருகிறது. நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மாநில மொழியில் பேசுவதைக் கட்டாயமாக்க வேண்டும்' என 'இந்தி தெரியாது போடா' என்ற டேக் உடன் பதிவிட்டுள்ளார்.