today corona rate in salem

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், கரோனா நோய்த்தொற்றுக்கு முதன்முதலாக தூய்மைப் பணியாளர் ஒருவரின் மனைவி பலியானார். இறந்தவர் வசித்த பகுதிக்குள் வெளியாள்கள் செல்ல முடியாத வகையில் சீல் வைக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisment

தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பரிசோதனைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) ஒரே நாளில் 1,974 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், நோய்த்தொற்றினால் ஞாயிறன்று மட்டும் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, இதுவரை சேலத்தை வசிப்பிடமாகக் கொண்டுள்ளவர்களில் 94 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஞாயிறு மட்டும் 10 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து சேலம் வந்தவர்களில் இதுவரை 125 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. ஆகமொத்தம், இன்று வரை சேலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 229 ஆக அதிகரித்துள்ளது.

ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் அளிக்கப்பட்ட பிறகு சமூக இடைவெளி, முகக்கவசம் அணியும் விதிகளையும் மக்கள் பரவலாகக்கைவிட்டுவிட்டனர். இதனால் மீண்டும் நோய்த்தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது.

Advertisment

இந்நிலையில், சேலத்தில் முதன்முதலாக கரோனா நோய்த்தொற்றுக்கு ஞாயிறன்று ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

சேலம் அம்மாபேட்டை 9ஆவது கோட்டத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் ஒருவரின் 45 வயதுள்ள மனைவி, தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அவர் சனிக்கிழமையன்று (ஜூன் 13) சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

கரோனா தொற்றால் இதுவரை சேலம் மாவட்டத்தில் உயிர்ப் பலிகள் நடந்திடாத நிலையில், இன்று நடந்த இச்சம்பவம் மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, நோய்த்தொற்றால் இறந்தவர் வசித்த பகுதியைச் சேர்ந்தவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Advertisment

இது ஒருபுறம் இருக்க, இறந்தவரின் கணவர், அவருடைய மகன், மகள் ஆகியோருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்களுக்கும் சேலம் அரசு மருத்துவமனையில் தனிமை வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

http://onelink.to/nknapp

இதையடுத்து சேலம் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் இணைந்து நோய்த்தொற்றால் இறந்த பெண்மணி வசித்த பகுதியில் கிருமி நாசினி மருந்து தெளித்தனர். அப்பகுதிக்குள் வெளியாட்கள் நுழையவும், உள்ளிருந்து வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், சென்று வந்த இடங்கள் ஆகிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.