Skip to main content

கே.சி.வீரமணியின் வீட்டின் பின்புறத்தில் 551 யூனிட் மணல்-கனிமவளத்துறை ஆய்வு!

Published on 19/09/2021 | Edited on 19/09/2021

 

Sand-Minerals Exploration at the Back of KC Veeramani's House!

 

அ.தி.மு.க.வைச் சேர்ந்த திருப்பத்தூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் எனத் தமிழ்நாடு, கர்நாடகாவில் 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் செப்டம்பர் 16- ஆம் தேதி காலை முதல் மாலை 06.00 மணி வரை அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை முடிவுக்கு வந்துள்ள நிலையில் அதில், இந்த ரெய்டில் கணக்கில் வராத 36 லட்சத்து ஆயிரத்து 60 ரூபாயும், அமெரிக்க டாலர்கள் 1.80 லட்சம், ரோல்ஸ் ராய்ஸ் உட்பட 9 ஆடம்பர கார்களும், 4 கிலோ 987 கிராம் தங்கமும், 47 கிராம் வைரமும், 7.2 கிலோ வெள்ளி, சொத்து ஆவணங்கள் போன்றவற்றைக் கைப்பற்றப்பட்டது.

 

கே.சி.வீரமணி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஜோலார்பேட்டையில் உள்ள கே.சி.வீரமணியின் இல்லத்திற்குப் பின்புறம் காலி பகுதியில் சுமார் 275 யூனிட் மணல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான உரிய ஆவணங்கள் தற்போதைக்கு இல்லை என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 275  யூனிட் மணல் தொடர்பாக கனிமவளத்துத் துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் நேற்று ஜோலார்பேட்டையில் உள்ள கே.சி.வீரமணியின் வீட்டுக்குச் சென்ற வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமவளத் துறை அதிகாரிகள், வீட்டின் பின்புறமாகக் குவிக்கப்பட்டிருந்த மணலை ஆய்வு செய்தனர். ஆனால் அதில் லஞ்ச ஒழிப்புத்துறை குறிப்பிட்ட அளவைவிடக் கூடுதலாக மொத்தம் 550 ஒரு யூனிட் மணல் உள்ளது தெரியவந்தது. உயரமான அளவில் மணலை கொட்டாமல் தட்டையாகப் பரப்பி வைக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. கே.சி.வீரமணியின் வீட்டுப் பகுதியில் கொட்டி வைக்கப்பட்டுள்ள மணலின் சந்தை மதிப்பு 33 லட்சம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பில் இல்லாத பட்சத்தில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு சட்டவிரோத மணல் பதுக்கல் பிரிவில் வழக்குப் பதிவு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.