Skip to main content

''ரயில்வே வாரியம் வம்படியாக ஈடுபட்டு மீண்டும் மொழிப்போராட்டத்துக்கு களம் அமைக்க வேண்டாம்'' "- - ஸ்டாலின் எச்சரிக்கை

Published on 06/09/2019 | Edited on 06/09/2019

தபால் துறையின் தேர்வுகளை தமிழில் நடத்த முடியும் என்கிற போது,  ரயில்வே துறையில் உள்ள தேர்வுகளை ஏன் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த முடியாது என கேள்வி எழுப்பி, ரயில்வே வாரியம் வம்படியாக ஈடுபட்டு மீண்டும் மொழிப்பேராட்டத்துக்கான களம் அமைத்துத்தர வேண்டாம் என எச்சரிக்கை விடுப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

மத்திய அரசு நிறுவனமான ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்படும் 'துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த தேவையில்லை' என்றும், 'ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்தினால் போதும்' என்றும், மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய வேதாளம் போல,  ரயில்வே வாரியம் அறிவித்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

dmk stalin report

 

நூறு சதவீதம் 'அப்ஜெக்டிவ்' கேள்விகள் அடங்கிய இந்தத் தேர்வினை மாநில மொழிகளில் நடத்த வேண்டுமா என்று தெற்கு மத்திய ரயில்வே எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ள ரயில்வே வாரியம், 'இந்தத் தேர்வின் கேள்வித்தாள்கள் மாநில மொழிகளில் இருக்க வேண்டும் என்று எந்த உரிமையும் கோர முடியாது' என அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் இருக்கிறது.

தபால் துறையில் ஏற்கனவே இதுபோன்ற துறைத் தேர்வுகளை மாநிலமொழிகளில் நடத்த முடியாது என்று முதலில் கூறி, பிறகு தி.மு.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போடப்பட்டது. அப்போது மத்திய அரசு, 'தபால் துறை தேர்வுகள் இனிமேல் தமிழில் நடத்தப்படும்' என்று உயர்நீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்து, அதன் அடிப்படையில் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

ஆகவே தபால் துறையின் தேர்வுகளை தமிழில் நடத்த முடியும் என்கிற போது,  ரயில்வே துறையில் உள்ள தேர்வுகளை ஏன் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த முடியாது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

அதேபோல் 'குரூப் சி பதவிகளுக்கான தேர்வுகள்' தொடர்பாக தென் மேற்கு ரயில்வேயின் சார்பில், 'ஆங்கிலத்தில் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தவர், இந்தி மொழியில் சில கேள்விகளுக்கு தேர்வு எழுதியிருந்தால் அந்த தேர்வுத்தாளைத் திருத்தலாமா? அப்படி திருத்தலாம் என்றால் எவ்வளவு மதிப்பெண்கள் வழங்க வேண்டும்? ஏற்கனவே விருப்பம் தெரிவித்த ஆங்கிலத்தில் எழுதியுள்ள கேள்விகளுக்கு மட்டும் மதிப்பெண்கள் போட வேண்டுமா அல்லது இந்தியில் பதிலளித்துள்ள கேள்விகளுக்கும் சேர்த்து அனைத்து கேள்விகளுக்கும் மதிப்பெண்கள் போட வேண்டுமா?' என்று கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்துள்ள ரயில்வே வாரியம், 'விருப்பம் தெரிவித்த ஆங்கிலம் தவிர, வேறு மொழியில் கேள்விகளுக்கு பதில் எழுதியிருந்தால் அந்த கேள்விகளுக்கு மதிப்பெண் போட வேண்டியதில்லை' என்று பதிலளித்திருக்கிறது.

 

dmk stalin report

 

ஆனால் அடுத்த வரியில், 'இந்தியில் எழுத விருப்பம் தெரிவித்து விட்டு, சில கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் எழுதியிருந்தால் அதற்கு மதிப்பெண் போட வேண்டும்' என்று கூறியிருப்பது, 'ஒரு கண்ணில் வெண்ணெய் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு' என்று ரயில்வே வாரியம், வஞ்சக எண்ணத்துடன்  செயல்படுவதைக் காட்டுகிறது.

குறிப்பாக, தமிழிலோ, மலையாளத்திலோ, கன்னடத்திலோ தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துவிட்டு, சில கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் அளித்திருந்தால் அதற்கு மதிப்பெண் கிடையாது என்று ரயில்வே வாரியம் அறிவித்திருப்பது,  அரசியல் சட்டம் அங்கீகரித்துள்ள மாநில மொழிகளுக்கு அப்பட்டமாகச் செய்யும் பச்சைத் துரோகம் மட்டுமல்லாமல் பஞ்சமா பாதகம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கூட்டாட்சித் தத்துவத்தையும், மாநில உரிமைகளையும் பா.ஜ.க. ஆட்சியில் ரயில்வே வாரியம் போன்ற அமைப்புகளும் உரிய முறையில் மதிக்கத் தவறுவது, இந்திய அரசியல் சட்டத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்களுக்கு மிகுந்த கவலையளிப்பதாக இருக்கிறது. ரயில்வே துறையில் இந்தி மொழி கற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, தமிழ் உள்ளிட்ட மற்ற மாநில மொழி தெரிந்தவர்களை படிப்படியாகக்  குறைக்கும் சதித் திட்டமாகவே இதை திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது.

இந்தியை வளர்க்க வேண்டும் என்பதற்காக,  தமிழ்மொழிக்குத் துரோகம் செய்யும் ரயில்வே வாரியத்தின் இந்த பாரபட்சமான நடவடிக்கையை திராவிட முன்னேற்றக் கழகத்தால்  நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகவே, தபால்துறை தேர்வு விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்தும் அதேவேளையில், ரயில்வேயில் நடைபெறும் 'துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வுகள்' (GDCE) அனைத்துமே தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும் என்றும், 'குரூப் சி பதவிகளுக்கான தேர்வினை ஆங்கிலத்தில் எழுத விருப்பம் தெரிவித்தவர்கள் இந்தியில் பதில் எழுதினால் அளிக்கப்படும் மதிப்பெண் சலுகை', தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் 'குரூப் சி' தேர்வு எழுதுவோருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்மொழியை புறக்கணிக்கும்  நடவடிக்கைகளில் ரயில்வே வாரியம் தொடர்ந்து வேண்டுமென்றே வம்படியாக ஈடுபட்டு, தமிழகத்தில் மாபெரும் மொழிப் போராட்டத்திற்கான களம் ஒன்றை மீண்டும் அமைத்திட வேண்டாம் என்று கடுமையாக எச்சரிக்க விரும்புகிறேன் என கூறப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.