Skip to main content

தேர்தல் முடிந்தும்… பணிக்கு திரும்பாத இன்ஸ்பெக்டர்கள்… டி.எஸ்.பிக்கள்!  –குமுறும் மகளிர் இன்ஸ்பெக்டர்கள்!

Published on 14/06/2019 | Edited on 14/06/2019


 
தேர்தல் முடிந்தும் ஏற்கனவே பணிபுரிந்த காவல்நிலையங்களுக்கு பணிமாறுதல் கிடைக்காததால் வீட்டையும் மாற்றமுடியாமல்  குழந்தைகளையும் பள்ளிக்கல்லூரிகளில் சேர்க்கமுடியாமல் குழப்பத்தில் குமுறிக்கொண்டிருக்கிறார்கள் இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.க்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள். இதில், பெரிதும் பாதிக்கப்படுவது மகளிர் இன்ஸ்பெக்டர்கள்தான். 

 

j


இதுகுறித்து நம்மிடம் பேசும் மகளிர் இன்ஸ்பெக்டர்களோ, “தேர்தல் நடத்தை விதிகளின் காரணமாக ஒரே இடத்தில் மூன்று வருடங்கள் பணியாற்றிய எஸ்.ஐக்கள், இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பிக்கள் பணிமாறுதல் செய்யப்பட்டார்கள். உதாரணத்துக்கு, கன்னியாகுமரியிலிருந்து மதுரை மாவட்டத்திற்கும் திருநெல் வேலியிலிருந்து இராமநாதபுரம் மாவட்டத்திற்கும் என மாற்றப்பட்டோம். தேர்தலுக்கான, தற்காலிகமான ட்ரான்ஸ்ஃபர் என்பதால் குடும்பத்தோடு யாரும் வீட்டை மாற்றிக்கொண்டு போகவில்லை. பிள்ளைகள் அருகிலுள்ள பள்ளிக்கல்லூரிகளில் படித்துக்கொண்டிருப்பதால் மூன்றுமாதத்திற்கு மட்டும் மாற்றிக்கொண்டு போக இயலாது. 


இதனால், வேறு மாவட்டங்களுக்கு பணிமாறுதல் ஆன எஸ்.ஐக்கள்., இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பிக்கள் தங்களது குடும்பங்களைவிட்டு விட்டு தற்காலிகமாக வீடுகளையும் வாடகைக்கு எடுத்தும் விடுதிகளிலும் தங்கி பணிகளை செய்துவந்தார்கள். இதில், ஆண் காவலர்களைவிட பெண்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டோம். காரணம், மகளிர் இன்ஸ்பெக்டர்களோ டி.எஸ்.பிக்களோ தனியாக வீடுகள்  எடுத்தும் தங்குவது சிரமம். விடுதிகளிலும் தங்கமுடியாது. அதனால், பலரும் தங்களது உறவினர்கள், தோழிகளின் வீடுகளில் தங்கி கஷ்டப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபட்டோம். 

 

p


எங்களைப்போலவே பணிமாறுதல் பெற்றுவந்த எஸ்.ஐக்கள் எல்லாம் தேர்தல் முடிந்ததும் பழையபடி பணிக்கு திரும்பிவிட்டார்கள். ஆனால், இன்ஸ்பெக்டர்களும் டி.எஸ்.பிக்களும்தான் தேர்தல் பணி முடிந்து 20 நாட்களுக்குமேலாகியும் பழையபடி பணிக்கு திரும்பாமல் இருக்கிறோம். இதனால், கணவன் பிள்ளைகளை பிரிந்து எவ்வளவு நாட்கள்தான் இங்கே கஷ்டப்படுவது? இங்கேயே, நிரந்தரப்பணி என்று உறுதியாகச்சொல்லிவிட்டால் நாங்கள் குடும்பத்தோடு மாறிவிடலாம். எதையுமே உறுதியான நடவடிக்கை எடுக்காததால் தினம் தினம் குடும்ப ரீதியான சிக்கல்களை சந்தித்துவருகிறோம்.  


மேலும், இந்த இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பிக்கள் எப்போதுவேண்டுமென்றாலும் மாறிவிடுவார்கள் என்பதால் கீழே இருக்கும் எஸ்.ஐக்கள், காவலர்கள் நாங்கள் சொல்வதை கேட்பதில்லை. மிகவும் அலட்சியமாக நடந்துகொள்கிறார்கள். லஞ்சம் வாங்கி பொதுமக்களுக்கு எதிராக செயல்படும் அவர்களை எங்களால் கட்டுப்படுத்தமுடியவில்லை. இதையெல்லாம், எங்களது டி.ஐ.ஜி., ஐ.ஜி. மற்றும் ஆணையர்களிடம் முறையிட்டால் டி.ஜி.பி.யிடமிருந்து உத்தரவு வந்ததும் பழைய இடங்களுக்கு பணிமாறுதல் கொடுத்துவிடுவோம் என்கிறார்கள். ஆனால், முதல் அமைச்சரின் சேலம் மாவட்டத்தில் மட்டும் தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் பழைய இடங்களுக்கே பணிமாறுதல் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.  


அதேபோல், தேர்தல் நேரத்தில் மாற்றப்பட்ட ஆர்.ஐ.,  தாசில்தார் உள்ளிட்ட வருவாய்ப்பணியாளர்களும் போராட்டம் அறிவித்ததும்  பழைய இடங்களுக்கே ட்ரான்ஸ்பர் பண்ணிவிட்டார்கள். ஆனால்,  இஸ்ன்பெக்டர்கள், டி.எஸ்.பிக்கள் போராட்டம் செய்யமாட்டார்கள் என்பதால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருக்கிறது. எங்கள், குடும்பச்சூழ்நிலைகளைப்புரிந்து தயவுசெய்து எங்களுக்கு பணிமாறுதல் வழங்கவேண்டும்” என்று கோரிக்கை வைத்து குமுறுகிறார்கள் மகளிர் இன்ஸ்பெக்டர்கள். 
மகளிர் இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பிக்களுக்குமுள்ள அதே சூழல்தான் ஆண் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் டி.எஸ்.பிக்களின் குடும்பங்களிலும் நிலவும்.

 

 இதுகுறித்து, தமிழக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஜெயந்த் முரளி ஐ.பி.எஸ்ஸை பலமுறை தொடர்புகொண்டபோதும், விபரத்தை கேட்டுக்கொண்டவர்கள், ’’சார் மீட்டிங்கில் இருக்கிறார்.  உங்கள் நம்பரை கொடுங்க.  அவரிடம் கொடுத்து பேசச்சொல்கிறோம்’’ என்றார்கள்.  அவர், இதுகுறித்து விளக்கம் அளித்தால் அதை பிரசுரிக்க தயாராக இருக்கிறது நக்கீரன்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

சைலேந்திரபாபு ஓய்வும் சங்கர் ஜிவால் பதவியேற்பும் (படங்கள்)

Published on 01/07/2023 | Edited on 01/07/2023

 

தமிழக டிஜிபியாக பதவி வகித்து வந்த சைலேந்திரபாபு நேற்றுடன் பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து சென்னை காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தமிழக டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று காவல்துறை தலைமையகத்தில் சைலேந்திரபாபு புதிதாகப் பதவியேற்ற சங்கர் ஜிவாலிடம் முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் கோப்புகளில் கையெழுத்திட்டுப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். 

 

இதையடுத்து காவல்துறை சார்பில் அவரை காரில் அமர வைத்து புதிய டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகள் கயிறு கட்டி இழுத்துச் சென்றனர். பின்னர் ஓய்வு பெற்ற சைலேந்திர பாபுவுக்கு தமிழக காவல்துறை சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. காவலர்கள் அணிவகுப்பு நடத்தி சைலேந்திர பாபுவுக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் புதிய டிஜிபியாக பதவியேற்றுள்ள சங்கர் ஜிவால் சைலேந்திர பாபுவுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். மேலும் இந்த விழாவில் உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா கலந்துகொண்டு சைலேந்திரபாபு அவர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கினார்.

 

 

Next Story

யூடியூபர் மணீஷ் காஷ்யப்பை கைது செய்ய பீகார் விரைந்தது தமிழக தனிப்படை  

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

 Tamil Nadu special force rushes to Bihar to arrest YouTuber Manish Kashyap

 

பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டதாக அண்மையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வெளியாகியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு வீடியோக்கள் வெளியாகின. இதனிடையே பீகாரில் இருந்து வந்த குழு ஒன்று இங்கு வெளிமாநிலத் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களின் பாதுகாப்பைப் பற்றி கேட்டறிந்தது. மேலும், வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தது.

 

தமிழ்நாடு காவல்துறை, வெளிமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோக்களை பதிவிட்டவர்களை சைபர் க்ரைம் பிரிவினருடன் இணைந்து கண்டறிந்து கைது செய்து வந்தது. அதேபோல், பீகார் அரசும் போலி வீடியோக்கள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுத்து வந்தது.

 

தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி வீடியோ பரப்பிய வழக்கில் தேடப்பட்டு வந்த யூடியூபர் மணீஷ் காஷ்யப், பீகார் மாநிலம் ஜகதீஷ்பூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். சினிமா ஷூட்டிங் போல் செட் அமைத்து வடமாநிலத்தவர்கள் தாக்கப்பட்டது போல் நடிக்க வைத்து வீடியோ காட்சிகளைப் பதிவு செய்து பரப்பியது அம்பலமாகியது. இந்நிலையில் யூடியூபர் மணீஷ் காஷ்யப்பை கைது செய்ய தமிழக காவல்துறை கைது வாரண்ட் பிறப்பித்ததை அடுத்து அவரை கைது செய்ய தமிழக தனிப்படை போலீசார் பீகார் விரைந்துள்ளனர். பீகார் சிறையில் உள்ள யூடியூபர் மணீஷ் காஷ்யப்பை மதுரை கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தமிழக போலீசார் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.