
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருடம் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27ம் தேதி விடுதலையானார். ஆனால் சசிகலா விடுதலையாவதற்கு சில நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தற்போது பெங்களூரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை முடித்துக்கொண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் அவர் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொறுப்பாளர்களும், தொண்டர்களும் சசிகலாவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கவும் தயாராகி வருகிறார்கள்.
மற்றொருபுறம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ''சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை, அவருடன் எந்த ஒரு தொடர்பும் அதிமுகவினர் வைத்துக்கொள்ளக் கூடாது'' எனும் நிலைபாட்டை முன்வைத்துள்ளார். நெல்லையில் சசிகலாவை வரவேற்று பேனர் வைத்த அதிமுக பிரமுகர் சுப்ரமணியராஜா என்பவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், துணை முதல்வர் ஒ.பி.எஸ்-ன் இளைய மகனான ஜெயபிரதீப் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், 'பெங்களூருவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் சசிகலா பூரண குணமடைந்து அறம் சார்ந்த பணியில் கவனம் செலுத்தி மன நிம்மதியுடன் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்' மேலும் 'இது அரசியல் சார்ந்த பதிவு அல்ல, என் மனதில் தோன்றிய மனிதாபிமானம் சார்ந்த பதிவு' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தியதே ஓபிஎஸ்தான். அப்படி இருக்கும்போது தற்போது அதிமுகவில் உள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என யாரும் சசிகலாவை பற்றி பேசவோ? கருத்துக்களை சொல்லவோ கூடாது என்று இருக்கும்போது, துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ஸின் இளைய மகனான ஜெயபிரதீப் இப்படி திடீரென சசிகலாவுக்கு வாழ்த்துகள் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.