
நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரையிலிருந்து கம்பம் நோக்கி, வைகோ நடைபயணம் மேற்கொள்வதற்கு முன்பாக, தீக்குளித்த விருதுநகர் மாவட்ட மதிமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி இறந்துபோன நிலையில், சொந்த ஊரான சிவகாசிக்கு, ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் எடுத்து வரப்பட்டது.
உறவினர்கள் கதறி அழுது அஞ்சலி செலுத்திய பிறகு, ரவியின் உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். சிவகாசி நகராட்சி மின்தகன மேடை அருகே இறுதிச் சடங்கினை நிகழ்த்தினார்கள். இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற வைகோ தலைமையில் அனைத்துக்கட்சிகள் சார்பில் இரங்கல் கூட்டம் நடந்தது. அப்போது பேசிய வைகோ “மோடி தலைமையிலான அரசு, மோசடி செய்து, நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துவதற்கான அனுமதியை வழங்கியிருக்கிறது. நியூட்ரினோவுக்கு எதிராக லட்சக்கணக்கான மக்களை திரட்டுவதற்காகவே நடைபயணம் துவங்கினேன். தீக்குளித்த நிலையிலும், நியூட்ரினோ திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று ரவி முழக்கமிட்டார். நியூட்ரினோ திட்டம் வந்தால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும். அப்படி ஒரு நிலை வந்துவிடக் கூடாது என்பதற்காகவே, தீக்குளித்து உயிரைவிடத் துணிந்ததாக, நீதிபதியிடம் மரண வாக்குமூலம் தந்தார். ரவியின் குடும்பத்தைப் பாதுகாத்து, காப்பாற்ற வேண்டியது மதிமுகவின் கடமை.” என்றார் தழுதழுத்த குரலில்!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)