Skip to main content

திரையரங்குகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு!

Published on 03/11/2020 | Edited on 03/11/2020

 

tamilnadu theatres are opening on nov 10th government released coronavirus prevention

 

தமிழகத்தில் திரையரங்குகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

 

அதில், 'திரையரங்க வளாகத்திற்குள் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம். முகக் கவசம் அணியாதவர்களை திரையரங்கினுள் அனுமதிக்கக்கூடாது. திரையரங்குகளில் 50% இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து படம் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குக்கு வெளியேயும், பொது இடங்களிலும் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். திரையரங்கின் நுழைவுவாயிலில் பொதுமக்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும்.

 

பொதுமக்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து வரிசையில் வரும் வகையில் குறியீடுகள் போட வேண்டும். திரைப்படத்தின் இடைவேளையின் போது, மக்கள் வெளியே வருவதைத் தவிர்க்க ஊக்குவிக்க வேண்டும். மக்கள் வெளியே சென்றுவரும் வகையில் இடைவேளைக்கான கால அளவை அதிகரிக்க வேண்டும். திரையரங்குகளில் டிக்கெட் வாங்குபவரின் தொலைபேசி எண்ணை நிர்வாகம் பெற வேண்டும். ஒவ்வொரு திரைப்படக் காட்சிக்கும் இடையே போதுமான கால இடைவெளி இருக்க வேண்டும். தியேட்டரில், எஸ்கலேட்டர், லிஃப்ட் ஆகியவற்றில் குறைந்த அளவிலான நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்'. இவ்வாறு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

நவம்பர் 10- ஆம் தேதி முதல் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்த தென்னிந்திய நடிகர் சங்கம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
south indian artistes assoociation thanked tn government for new film city

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் கடந்த 19 ஆம் தேதி 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப் பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் சென்னை பூந்தமல்லியில் அதிநவீன திரைப்பட நகரம் அமைப்பதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.  

தமிழக அரசு அறிவிப்பிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. அதில், “சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தமிழ்த் திரைத்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையான திரைப்பட நகரம் குறித்த அறிவிப்பில், சென்னையை ஒட்டி பூந்தமல்லியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் வி.எப்.எக்ஸ். அனிமேஷன் மற்றும் எல்.இ.டி கன்வர்ஷன் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய படப்பிடிப்பு தளங்கள், புரொடக்சன் பணிகள் பிரிவு, 5 நட்சத்திர ஓட்டல் வசதிகளுடன் கூடிய கட்டமைப்புகள் மற்றும் சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்புடன் கூடிய சமூக கட்டமைப்பு வசதிகளுடன் திறந்தவெளி திரையரங்கம் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது

தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் குறிப்பாகப் பெரிய படங்களின் படப்பிடிப்புகள் அண்டை மாநிலங்களில் நடப்பதால் இங்குள்ள நடிகர்கள் குறிப்பாகத் திரையுலக தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் குறைந்தன. இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் நலம் வளம் பெறும். ஒரு காலத்தில் ஆசியாவின் மிகப்பெரும் சினிமா நகரமாக திகழ்ந்து, வரலாறு படைத்திட்ட நகரமிது. காலத்தில் கரைந்து போன அச்சரித்திரத்தை மீட்டெடுக்கும் திட்டமிது. தமிழ்த் திரைப்படங்களை உலக வரைபடத்தில் அழுத்தமாக பதிவதற்கு ஊக்கம் தந்து, படைப்பாளிகளின் கனவுலகத்தை மேலும் விரியச் செய்கின்ற திட்டமிது. தமிழ்த் திரையுலகின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.