Advertisment

’தமிழக அரசும் தமிழக ஆளுநரும் இந்த பிரச்சனையில் இனியும் தாமதம் செய்யாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ - திருமாவளவன்

t

உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் . இது குறித்து அவரது அறிக்கை:

Advertisment

இராஜீவ்காந்தி கொலைவழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள பேரறிவாளன் கடந்த 2015 டிசம்பர் மாதத்தில் தமிழக ஆளுநரிடம் கருணை மனு ஒன்றை சமர்ப்பித்திருந்தார். அதன்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டதன் அடிப்படையில் அந்த மனு மீது உடனே நடவடிக்கை எடுக்குமாறு உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisment

இராஜீவ் கொலை குற்றவாளிகளின் மரண தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்த போது அன்றைய தலைமை நீதிபதி சதாசிவம் 7 வினாக்களை முன்வைத்து அவற்றுக்கு அரசியல்சாசன அமர்வு விளக்கமளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். அதன்படி அமைக்கப்பட்ட 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு 2015 ஆம் ஆண்டு டிசம்பரில் தீர்ப்பை வழங்கியது. அதில் மூன்று நீதிபதிகள் ஒருவிதமாகவும் இரண்டு பேர் வேறுவிதமாகவும் தீர்ப்பளித்தனர்.

சிபிஐ போன்ற மத்திய அரசின் அமைப்பால் விசாரிக்கப்பட்ட வழக்கில் மாநில அரசு தன்னிச்சையாகத் தண்டனைக் குறைப்பு செய்யமுடியாது என்று பெரும்பான்மைத் தீர்ப்பு கூறியது.

சிறுபான்மை தீர்ப்பை அளித்த நீதிபதி யு.யு.லலித் ‘தண்டனை குறைப்பு செய்து விடுவிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது’ என்று அத்தீர்ப்பில் கூறியிருந்தார். தற்போது, உச்சநீதிமன்றம் அதேவிதமான தீர்ப்பைத்தான் வழங்கியுள்ளது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் அரசியல்சட்ட உறுப்பு 161ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழக அரசே விடுதலை செய்ய முடியும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். எமது நிலைப்பாட்டையே இன்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு உறுதிசெய்துள்ளது.

தமிழக அரசும் தமிழக ஆளுநரும் இந்த பிரச்சனையில் இனியும் தாமதம் செய்யாமல் உரிய நடவடிக்கை எடுத்து 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

Thirumavalavan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe