Skip to main content

பிரதமர் ஹெலிகாப்டரில் பறந்தாலும் தமிழ்நாடு கறுப்பு கொடி காட்டும்: மு.க.ஸ்டாலின் பேச்சு 

Published on 09/04/2018 | Edited on 09/04/2018


 

mk stalin Speech

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (08-04-2018) காவிரி உரிமை மீட்புப் பயணத்தில், ஒக்கநாடு கிராமத்தில் திரண்டிருந்த பொதுமக்களிடையே ஆற்றிய உரை விவரம்:
 

 
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வேண்டுமென்று உச்ச நீதிமன்ற தெளிவான, இறுதியான தீர்ப்பை அளித்திருக்கிறது. யாரும் மேல்முறையீடு செய்யக்கூடாது என்றும் தெரிவித்து இருக்கிறது. ஆனால், தீர்ப்பு வெளியானதும் மத்திய நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்களும், மத்திய நீர் வளத்துறையின் செயலாளரும் காவிரி மேலாண்மை வாரியத்துக்கு தடைபோடும் வகையில் சில செய்திகளை திட்டமிட்டு பரப்பினார்கள். அதனால், மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்ற முன்வராது என்று நமக்கெல்லாம் அப்போதே அச்சம் ஏற்பட்டது.
 

 

எனவே, எதிர் கட்சி வரிசையில் இருக்கின்ற நாங்கள் அனைவரும் உடனடியாக அனைத்து கட்சி கூட்டம் கூட்டவும், சட்டமன்றத்தினை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். ஆனால், ஆளும் எடப்பாடி அல்ல, மத்திய அரசுக்கு எடுபிடியாக உள்ள ஆட்சி அதுபற்றியெல்லாம் கவலைப்படவில்லை. இனி யாரும் இதை எடப்பாடி ஆட்சி என சொல்லாமல் எடுபிடி ஆட்சி என்று சொல்ல வேண்டும்.

 

இது அரசியல் பிரச்சினையல்ல, ஒட்டுமொத்த விவசாயிகளின் பிரச்சினை, தமிழ்நாட்டின் பிரச்சினை என்பதால் எல்லா கட்சிகளுக்கும், எல்லா அமைப்புகளுக்கும், ஆளும் அதிமுக, மத்திய பிஜேபி கட்சி உட்பட எல்லோருக்கும் நாம் அழைப்பு விடுத்தோம். அனைத்து கட்சி கூட்டத்துக்கான தேதியை நாம் அறிவித்தவுடன், திடீரென அரசின் சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்துவதாக ஒரு அறிவிப்பு வந்தது. கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில், மாநில பிரச்சினைக்காக கட்சி வேறுபாடு மறந்து அனைவரும் ஒன்று சேருவார்கள். ஒருவருக்கொருவர் எதிரியாக இருந்தாலும், சட்டமன்றத்தில் ஒன்றாக இணைந்து தீர்மானம் நிறைவேற்றுவார்கள்.

 

இதே காவிரி பிரச்சினைக்காக ஆளும் கட்சி, எதிர் கட்சி உள்பட எல்லா கட்சிகளும் ஒன்று சேர்ந்து உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் அப்படி ஒரு நிலை இல்லை. அது வர வேண்டுமென நாம் முயற்சித்துக் கொண்டு இருக்கிறோம். எனவே, நாம் கூட்டவிருந்த அனைத்து கட்சி கூட்டத்தை ரத்து செய்துவிட்டு, எல்லா கட்சிகளின் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு பேசி, அரசு கூட்டிய கூட்டத்துக்கு சென்றோம். அந்தக் கூட்டத்தில், எல்லா அரசியல் கட்சிகளின் தலைவர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை எல்லாம் முதல்வர் அழைத்துக் கொண்டு, டெல்லி சென்று பிரதமர் மோடி அவர்களை சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அழுத்தம் தர வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றினோம்.

 

ஆனால், அதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபட்டார்களா என்றால் இல்லை. ஓரிரு நாட்கள் கழிந்த பிறகு முதலமைச்சர் எடுபிடி பழனிசாமி என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு, எதிர் கட்சித் தலைவர் என்றமுறையில் உங்களை சந்திக்க வேண்டும், உடனடியாக கோட்டைக்கு வரமுடியுமா என்று கேட்டார். கட்சியின் தோழர்கள் கூட, “அவர் அழைத்து நீங்கள் ஏன் செல்ல வேண்டும்?”, என்று கேட்டார்கள். அதை நான் கவுரவம் குறைச்சலாக நினைக்கவில்லை. இது நம் சொந்தப் பிரச்சினை இல்லை, நாட்டின் பிரச்சினை, மக்கள் பிரச்சினை, விவசாயிகளின் பிரச்சினை. எனவே, நமக்கு எத்தனை அவமானம் வந்தாலும் கவலையில்லை, நாம் போவோம் என்று தெரிவித்து, திரு. துரைமுருகன் அவர்களை அழைத்துக் கொண்டு நேரில் சென்றேன்.

 

முதலமைச்சர், “பிரதமர் சந்திக்க மறுக்கிறார், தேதி வழங்க மறுக்கிறார், நீர் வளத்துறை அமைச்சரை சென்று சந்தியுங்கள் என்று அங்கிருந்து செய்தி வந்திருக்கிறது”, என்று சொன்னார். அதையும் உறுதியாக சொல்லவில்லை, செய்தி வந்ததாக சொன்னார். உடனே, “நாம் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி ஒரு தீர்மானம் போட்டிருக்கிறோம். எனவே, இப்படியொரு செய்தி வந்து, அதை மாற்ற வேண்டுமென்றால், மீண்டும் அனைத்து கட்சி கூட்டம் கூட்டுங்கள். அதில் முடிவு செய்வோம்”, என்று நான் சொன்னேன். அதில் கூட நான் விதண்டாவாதம் பேசவில்லை. ஆனால், “இல்லை. மீண்டும் கூட்டம் கூட்டினால் காலையிலிருந்து மாலை வரை நடத்த வேண்டியிருக்கும். அது தேவையில்லை”, என்று அவர்கள் சொன்னார்கள். ஒருவேளை, அதை செய்ய முடியவில்லை என்றால் சட்டமன்றத்தை கூட்டுங்கள், ஒரு தீர்மானம் போடுங்கள் என்று நாங்கள் சொன்னோம்.

 

உடனே, எடுபிடி பழனிசாமி, “நாங்கள் சட்டமன்றத்தை கூட்டி, நாங்கள் தீர்மானம் நிறைவேற்றினால், நீங்கள் அதற்கு ஆதரவளிக்க வேண்டும், வேறு எதுவும் பேசக்கூடாது”, என்று ஒரு கோரிக்கையை முன் வைத்தார். உடனே நான், “இந்த வேலையெல்லாம் எங்களிடம் நடக்காது. தலைவர் கலைஞர் அவர்கள் எங்களை அப்படி உருவாக்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று நீங்கள் போடும் தீர்மானத்தை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். ஆனால், இருக்கும் சூழ்நிலையை நாங்களும், காங்கிரஸ் உறுப்பினர்களும் சட்டமன்றத்தில் பேசுவோம்”, என்று தெரிவித்தேன்.

 

ஆனால், “இல்லை, அப்படி யாராவது தப்பாக பேசினால் சரியாக இருக்காது”, என்றார்கள். “நீங்கள் ஆட்சிக்கு, பதவிக்கு பயந்து கொண்டு என்ன தீர்மானம் வேண்டுமானாலும் போடலாம் ஆனால், நாங்கள் எதை கண்டும் அச்சப்பட மாட்டோம், பேசியே தீருவோம்”, என்று நான் சொன்னேன். ஆனால், அடுத்த நாள் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, கர்நாடகா ஆகிய 4 மாநில அதிகாரிகள் சந்திக்க இருக்கிறார்கள் என்று செய்தி சொன்னார்கள். அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள், ஆனால் நாங்கள் ஏமாற தயாராக இல்லை. நிச்சயமாக காலம் கடத்துவதற்காகவே இதனை செய்கிறார்கள். இதற்கு ஒப்புகொள்ள கூடாது என்று நாங்கள் தெரிவித்தோம்.

 

அதன்பிறகு, நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய சட்டமன்றத்தை கூட்டினார்கள். அதில் இரண்டு மணி நேரம் சிறப்பு சட்டமன்றம் நடத்தினர். அதில் கலந்து கொண்டு எல்லா பிரச்சினைகளையும் நாங்கள் பேசினோம். அப்போது, ”அதிமுக சார்பில் உள்ள 50 எம்.பி.க்களும், திமுக சார்பில் உள்ள 4 எம்.பி.க்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூட அவசியம் இல்லை, ராஜினாமா செய்வதாக அறிவித்து, மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். அதுமட்டுமல்ல, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய முன் வந்தால், திமுக சார்பில் இருக்கின்ற தலைவர் கலைஞர் உட்பட மொத்தமுள்ள 89 சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய தயார்”, என்று தெரிவித்தேன். ஆனால், இந்த அரசுக்கு அந்த யோக்கியதை இல்லை.

 

இந்த நிலையில், மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி ‘ஸ்கீம்’ என்றால் என்ன என்று கேட்டிருக்கிறார்கள். அதன் அர்த்தம் தெரியாதவர்கள், குறிப்பாக பிரதமர் மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார். டிக்ஷனரியை பார்த்தாலே அதற்கு அர்த்தம் தெரியும். அந்த மனு மீது நாளை தீர்ப்பு வரவிருக்கிறது.

 

தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் கொந்தளிப்பாக இருக்கிறது. திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம், போராட்டம், சாலை மறியல், ரயில் மறியல், முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று இருக்கிறது. இப்போது காவிரி உரிமை மீட்புப் பயணம் நடக்கிறது. பிரதமருக்கே கறுப்பு கொடி காட்டும் போராட்டம் அறிவித்துள்ளோம். இதையெல்லாம் அறிந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தமிழ்நாட்டு மக்கள் கவலைப்பட வேண்டாம், தீர்ப்பு வரும் வரையில் பொறுத்திருக்க வேண்டும். அதுவரை எந்தப் போராட்டத்திலும் ஈடுபட வேண்டாம், என வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.

 

நம்முடைய போராட்டங்களை எல்லாம் பார்த்து உச்ச நீதிமன்றமே அஞ்சும் நிலை வந்திருக்கிறது என்பது இதனால் தெரிகிறது. எனவே, இதற்கு நியாயம் வழங்க வேண்டுமென்று அவர்கள் உணர்ந்து இருக்கிறார்கள். ஒருவேளை, நாம் எதிர்பார்க்காத ஒரு தீர்ப்பு நாளை வந்து விட்டால், இந்தப் பயணம் 13 ஆம் தேதியோடு முடிவடையாமல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை, இந்தப் போராட்டம் தொடரும்.

 

இன்றைக்கு உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எல்லாரையும் விட, காவிரி பிரச்சினையை முழுமையாக அறிந்து வைத்துள்ள தலைவர் கலைஞர் அவர்கள் என்பது உங்களுக்கும் தெரியும். இதற்காக எத்தனை முறை டெல்லிக்கு சென்றிருப்பார், எத்தனை அமைச்சர்களை, பிரதமர்களை சந்தித்துப் பேசியிருப்பார், எத்தனை முறை மற்ற மாநில முதலமைச்சர்களை சந்தித்துப் பேசியிருக்கிறார் என்பதெல்லாம் வரலாறு. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது, நடுவர் மன்றம் அமைத்தது என பல்வேறு பணிகளில் அவர் ஈடுபட்டு இருக்கிறார். அவரிடம் வாழ்த்து பெற்றுதான் இந்தப் பயணத்தை தொடங்கியிருக்கிறேன்.

 

அதுமட்டுமல்ல, பிரதமருக்கு கறுப்பு கொடி காட்டும் போராட்டத்தையும் அறிவித்து இருக்கிறோம். வரும் 12 ஆம் தேதி அவர் வருவாரா, இல்லையா என்பது தெரியவில்லை. கறுப்பு கொடி காட்டினால் அவமானம் என்ற அச்சம் அவர்களுக்கு வந்திருக்கிறது. கடந்த இரு நாட்களாக டெல்லியில் இருந்து பல அதிகாரிகள் வந்து இதுபற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் எத்தனை பேரை முன்கூட்டியே கைது செய்து சிறையில் அடைத்தாலும், கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நிச்சயம் நடக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

 

இன்றைய தினம் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் பேசி, பிரதமர் வரும் நாள் கறுப்பு நாளாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து, விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கறுப்பு சட்டை அணியவும், கறுப்பு பேட்ஜ் அணியவும், தமிழ்நாட்டில் தமிழன் என்று சொல்லும் ஒவ்வொருவர் வீட்டிலும் கறுப்பு கொடி ஏற்ற வேண்டும் என்று அறிவித்திருக்கிறோம். தமிழ்நாடே கறுப்பு கடலாக காட்சியளிக்க வேண்டும். பிரதமர் சாலை வழியாக வராமல், ஹெலிகாப்டரில் பறந்தாலும் தமிழ்நாடு கறுப்பு கொடி காட்டும் என்பது உறுதி. அதற்கு நீங்கள் அனைவரும் தயாராக வேண்டுமென்று கேட்டு, உங்களுடைய உற்சாக வரவேற்புக்கு நன்றி தெரிவித்து, விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம். இவ்வாறு உரையாற்றினார்.

சார்ந்த செய்திகள்