Skip to main content

"நவ. 1 முதல் மீண்டும் பள்ளிக்கு பயில வரும் குழந்தைகளை நேசமுடன் வரவேற்போம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Published on 30/10/2021 | Edited on 30/10/2021

 

tamilnadu schools students class rooms chief minister mkstalin announcement

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (30/10/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கரோனா என்ற பெருந்தொற்றுக் காலம் முடிவுக்குவந்து மெல்ல மெல்ல ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. அனைத்திலும் குறிப்பாக, வரும் நவம்பர் 1ஆம் நாள், பள்ளிகளில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகள் தொடங்கப்பட இருக்கின்றன. பள்ளிகளை நோக்கித் துள்ளிவரும் பிள்ளைகள் அனைவரையும் வருக, வருக என்று நான் வரவேற்கிறேன். 

 

இருண்ட கரோனா காலம் முடிந்து ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தை மாணவ, மாணவியர் அனைவரும் தொடங்க இருக்கிறீர்கள். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற நம்பிக்கையுடன் கல்விச் சாலைக்குள் உங்களை நீங்கள் ஒப்படைத்துக்கொள்ளுங்கள். 

 

1 முதல் 8 வரையிலான வகுப்புகள் கிட்டத்தட்ட 600 நாட்களுக்கும் மேலாக நடைபெற இயலாத நிலை இருந்தது. ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு காலம் அந்த வகுப்பைச் சேர்ந்த பிள்ளைகள் பள்ளிகளுக்கும் வர இயலாத சூழல் இருந்தது. கரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைத்து, கல்விச் சாலைகளின் கதவுகளைத் திறந்துள்ளது தமிழ்நாடு அரசு. இந்த உன்னதமான சேவைக்கும், உழைப்புக்கும் காரணமான அனைவருக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

 

மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளிக்கு ஆர்வத்துடன் வரும் குழந்தைகளுக்கு உற்சாகமூட்டும் வகையிலும், நம்பிக்கை ஊட்டும்வகையிலும் அவர்களை இன்முகத்துடன் வரவேற்பது நம் அனைவரின் கடமையாகும்.

 

கல்விச் சாலைகளின் கதவுகளை நோக்கி வரும் மாணவர்களை வரவேற்க நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களையும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளையும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களையும், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளையும், தலைமை ஆசிரியர்களையும், ஆசிரியர்களையும் கேட்டுக்கொள்கிறேன். விருந்தினர்களை வாசலுக்கு வந்து வரவேற்பதைப் போல வரவேற்பு கொடுங்கள் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

 

ஏற்கெனவே அவர்களுக்கு அறிமுகமான பள்ளியாக இருந்தாலும், ஒரு பெரும் நெருக்கடிக்குப் பிறகு அந்தப் பிள்ளைகள் வருகிறார்கள். 'கரோனா'வுக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், 'கரோனா குறித்த பயம்' மக்கள் மனதில் இருக்கிறது. அதுவும் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் அதிகம் இருக்கிறது. ஒருவிதமான பரிதவிப்புடன் வரும் பிள்ளைகளின் பயம் போக்கி அரவணைக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

 

கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி வரவேற்பு கொடுங்கள். இனிப்புகளை வழங்குங்கள். மலர்க் கொத்துகளையும் வழங்கலாம். எதை வழங்கினாலும் அத்தோடு அன்பையும் அரவணைப்பையும் நம்பிக்கையையும் சேர்த்து வழங்குங்கள்.

 

முதல் இரு வாரங்களுக்கு மாணவர்களுக்கு உற்சாகமும் நம்பிக்கையும் ஊட்டும் வகையிலான கதை, பாடல், விளையாட்டு, வண்ணம் தீட்டுதல், நினைவாற்றலை வளர்ப்பதற்கான விளையாட்டு உத்திகள் போன்றவற்றை வகுப்பறைகளில் வழங்குங்கள் என்று ஆசிரியர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

 

சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக முறையான பள்ளி சார்ந்த கற்றலில் குழந்தைகள் ஈடுபட இயலாத காரணத்தால் அந்தந்த வகுப்புக்குரிய திறன்களை முழுமையாக அடைய முடியாத நிலை இருக்க வாய்ப்புள்ளது. இதனை ஈடுசெய்யும் விதமாக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். அதற்கான புத்தாக்கப் பயிற்சியை ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 

என்னுடைய அன்பார்ந்த வேண்டுகோளை ஏற்று, மாணவச் செல்வங்கள் பள்ளிக்கு வரும் நாளை இனிய நாளாக மாற்றுங்கள். பள்ளிக்கு வரும் பிள்ளைகளை நேசமுடன் கண் போலப் போற்றுங்கள்.

 

மகிழ்ச்சியான சூழலை உருவாக்குவதன் மூலமாக மாணவர்ளை மீண்டும் உற்சாகப்படுத்துவோம்! மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதன் மூலமாக எதிர்கால மனித ஆற்றலை உருவாக்குவோம்!

 

இதன் மூலமாக மாணவர்களை உற்சாகப்படுத்துவதற்காக மட்டுமல்ல, நமக்கும் நமது பள்ளிக்கால உற்சாகத்தைப் பெறலாம்.

வாருங்கள்!

 

நாம் அனைவரும் சேர்ந்து நம் குழந்தைகளைக் கொண்டாடுவோம்!" இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Ganesamurthy's demise; Political leaders condole

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.  வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேசமூர்த்தியின் உயிரிழப்பு காரணமாக மதிமுக கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

nn

அவரின் மறைவுக்கு அவரது சொந்த கட்சியைச் சேர்ந்த வைகோ, அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்திக் குறிப்பில், 'ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். ஆற்றல்மிகு தளகர்த்தரான கணேசமூர்த்தியின் மறைவு சொல்லொணாத் துயரைத் தந்துள்ளது. அவர் பிரிவால் வாடும் மதிமுக தொண்டர்கள், திராவிட இயக்க பற்றாளர்களுக்கு என்னுடைய இரங்கல்' எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் 'மதிமுகவின் மூத்த அரசியல் முன்னோடி கணேசமூர்த்தி காலமான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கணேசமூர்த்தியை பிரிந்து வாடும் குடும்பத்தார், வைகோ உள்ளிட்ட நண்பர்களுக்கு ஆறுதல்' என கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Next Story

“எனதருமை மாணவச் செல்வங்களே...” - முதல்வர் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Chief Minister Stalin congratulates students appearing for 10th public exam

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது.  செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best!  நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதி செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.