Skip to main content

அரசு நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகளை விரட்டும் ஃபானி புயல்

Published on 28/04/2019 | Edited on 28/04/2019

 

வானிலை ஆய்வு மையம் புயலுடன் கூடிய கனமழை இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல்மூட்டைகளை என்ன செய்வது என்று புரியாமல் கையறு நிலையில் உள்ளனர் கொள்முதல் நிலைய ஊழியர்கள்.

 

f

 

 தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யப்படும் சம்பா மற்றும் தாளடி நெல்லை கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்வது வழக்கம். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வந்த நெல் மூட்டைகளை திறந்தவெளியில், போதிய பாதுகாப்பு இல்லாமல் ஒவ்வொரு கொள்முதல் நிலைய வளாகத்திலும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கோடை வெயிலின் உஷ்ணத்தில் 17 மகசரில் விவசாயிகளிடம் எடுக்கப்பட்ட நெல் தற்போது 12 மகசராக காய்ந்து கிடக்கிறது.

 

r

 

இந்த நிலையில் ஃபானி புயல் உருவாகி பலத்த மழையுடன் கூடிய புயலடிக்கும் என ஆய்வு மையம் அறிவித்திருக்கின்ற நிலையில் போதுமான பாய், மரம், கல் என பாதுகாப்பு அரண்கள் ஏதுவும் இல்லாமல் என்ன செய்வது என விழிபிதுங்கி நிற்கிறார்கள் கொள்முதல் நிலைய அதிகாரிகள். 

 

இந்த நிலையில் சீர்காழியில் தாலுகாவிற்கு உட்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை எருக்கூர் நவீன ரைஷ்மில் குடோனில் அடுக்கிவைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

 

r

 

கொள்முதல் நிலைய அதிகாரிகள் கூறுகையில், " எடமணலில் 54 கோடி மதிப்பீட்டில் அதிநவீன நெல் குடோன் கட்டுமானப்பணிகள் துவங்கி பலவருடங்களாகியும் முழுமை பெறாத நிலையில் உள்ளது. அதேபோல் வேதாரண்யம் அருகே உள்ள கோவில்பத்தில் பலஆயிறம் கோடி மதிப்பீட்டில் நெல் அடுக்கும் குடோன் கட்டப்பட்டு திறப்பு விழா காண்பதற்கு முன்பே கஜாபுயலில் தரைமட்டமாகிவிட்டது.

 

தற்போது புதுப்பிப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான வேலைகள் துவங்கி இருக்கிறது. சாதாரண புயலில் பிரமாண்டமான நெல் குடோனே தரைமட்டமாகிவிட்டது. ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் வெட்ட வெளியில் அடுக்கப்பட்ட நெல் மூட்டைகளில் பாதிப்பு ஏற்பட்டால் நஷ்ட ஈடு கட்ட வைக்கிறார்கள். அதனால் தான் கையில் இருக்கும் பணத்தைக்கொண்டு பாதுகாப்பாக அடுக்கி வருகிறோம்," என்கிறார்கள் அதிகாரிகள்.

 

சார்ந்த செய்திகள்