உள்ளாட்சி தேர்தல் ஜுரத்தில், அதுவும் என்ன செய்தாவது பதவியைக் கைப்பற்றியே தீரவேண்டும் என்ற வெறியில், தமிழகத்தில் அங்கங்கே சிலர் போடும் ஆட்டம் சொல்லி மாளாது.‘இது எல்லாமே பணத்துக்குத்தான்டா..’ என்பதை உறுதிப்படுத்தும் விதமாக சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. விருதுநகர் மாவட்டம்- சாத்தூர் வட்டம்- வெம்பக்கோட்டை ஒன்றியத்திலுள்ள கோட்டைப்பட்டி கிராமத்திலோ, ஒருவரின் உயிரையே பறித்துவிட்டனர்.

tamilnadu local body election virudhunagar Auctions incident police investigation

சாத்தூர் அருகே ஏழாயிரம் பண்ணை போலீஸ் லிமிட்டில் உள்ளது கோட்டைப்பட்டி கிராமம். இங்கே அதிமுக கிளைச் செயலாளராக இருக்கிறார் ராமசுப்பு. இவர், ஊராட்சி தலைவர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு, அன்றிரவு (11-ஆம் தேதி) கோட்டைப்பட்டியில் தனது சமுதாய (கவரா நாயுடு) மக்களிடையே ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்திற்கு ஊர் நாட்டாமையான காங்கிரஸ் கட்சியில் மாவட்ட பொறுப்பில் உள்ள சுப்புராமை அழைக்கவில்லை. காரணம், சுப்புராமும் அதே பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யும் முடிவில் இருந்ததுதான். ஆனாலும், சமுதாய ரீதியாக நடந்த பொதுவான ஆலோசனைக் கூட்டம் என்பதால், சுப்புராம் தரப்பினரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Advertisment

Advertisment

அந்தக் கூட்டத்தில் “நமது சமுதாய மக்கள் அனைவரின் ஒருமித்த ஆதரவும் எனக்கு வேண்டும்..” என்று அதிமுக கிளைச் செயலாளர் ராமசுப்பு பேச, சிவகாசி ஆக்சிஸ் வங்கியின் விற்பனை பிரிவு மேலாளரான சதீஷ்குமார், தனது அண்ணன் சுப்புராமுக்கு ஆதரவாக எதிர்க்குரல் எழுப்பினார். ”சமுதாய மக்கள் யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு.. அப்புறம் ஆலோசனைக் கூட்டம் நடத்தி ஆதரவு கேட்பது முறையல்ல.”என்று கூற, கூட்டத்தில் சலசலப்பு கிளம்பியது. சதீஷ்குமாரை பேசவிடாமல் சிலர் தடுக்க முற்பட்டபோது “தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு ராமசுப்புவுக்கு என்ன தகுதி இருக்கிறது?” என்று அவர் கேட்க, ராமசுப்பு தரப்பில் ஆளாளுக்கு சதீஷ்குமாரை தாக்கியிருக்கின்றனர். ஒருகட்டத்தில் சதீஷ்குமார் பேச்சு மூச்சற்ற நிலையில் சரிந்திருக்கிறார். உடனே, அவரை சிவகாசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டது.

ஏழாயிரம்பண்ணை காவல்துறையினர் சதீஸ்குமாரின் உடலைக் கைப்பற்றி, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து, அதிமுக கிளைச் செயலாளர் ராமசுப்பு, அவருடைய சகோதரர் கணேசன், அரசு ஊழியரான செல்வராஜ், முத்துராஜ், ராமசுப்புவின் ஆதரவாளரான சுப்புராம், சுப்புராஜ் ஆகிய ஏழு பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.