Skip to main content

தமிழக அரசின் டாஸ்மாக் திறப்பு விவகாரம் சமூக அழிவைச் சந்திக்க நேரிடும்; வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு கண்டனம்!

Published on 05/05/2020 | Edited on 05/05/2020

 

tamilnadu lawyers association tn govt tasmac opening


கரோனா வைரஸ் தாக்குதலால் உலகமே நிலைகுலைந்து சாமானிய மக்கள் அன்றாட உணவுக்கே வழியற்று கையேந்தி நிற்கும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறக்க முடிவெடுத்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது என்கிறார்கள்  வழக்கறிஞர்கள் கூட்டமைப்பினர். 
 

இது குறித்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கான வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம.சேயோன் கூறுகையில், "கடந்த 40 நாட்களுக்கு மேலாக கரோனா வைரஸ் பரவுதலைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மே மாதம் 7- ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்கிற தமிழக அரசின் அறிவிப்பு பெருத்த அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
 

தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாகவும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பதாலும், குற்றங்கள் சுமார் 75 சதவீதம் குறைந்துள்ளது. தற்போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லை. வாகன விபத்துகள் குறைந்திருக்கிறது. கணவன்- மனைவிக்கு இடையே சண்டைகள் குறைந்திருக்கிறது. அடிதடி, கொலை வழக்குகளும் பெரிய அளவில் குறைந்துள்ளது. 
 

இந்நிலையில் மே மாதம் 7- ஆம் தேதி முதல் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறந்தால், குற்றங்கள் மீண்டும் துவங்கி அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் டாஸ்மாக் கடைகளை நோக்கி குடிமக்கள் படை எடுக்கும் பொழுது சமூக விதிகளைப் பின்பற்றாமல் மதுபானங்களை வாங்க முயற்சிக்கும் பொழுது அது சமூகத் தொற்றாகப் பரவ வாய்ப்புள்ளது. கரோனா தாக்குதல் ஆயிரக்கணக்கில், நூற்றுக்கணக்கில் பரவும். ஆக டாஸ்மாக் கடைகளைத் திறப்பதால் லட்சக்கணக்கில் சமூகத் தொற்று பரவ வாய்ப்புள்ளது. தற்போது இரட்டை இலக்கத்தில் இருக்கும் இறப்பு சதவீதம், டாஸ்மாக் கடைகளைத் திறந்தால் ஆயிரக்கணக்காக மாற நேரிடும், பெரிய இழப்புகளைத் தமிழகம் சந்திக்க நேரிடும். 
 

பொருளாதாரத்தைச் சரி செய்ய எவ்வளவோ நல்ல வழிகள் இருக்கும்போது, மக்களை அழித்தொழிக்கும், நடுத்தர, ஏழ்மையான குடும்பங்களை வீதிக்குக் கொண்டுவரும் டாஸ்மாக் கடையைத் திறந்து அதன் மூலம் வருவாயைப் பெருக்க வேண்டும் என்கிற தமிழக அரசின் முடிவானது தவறான பாதைக்கு இட்டுச்செல்லும். 
 

http://onelink.to/nknapp

 

தற்பொழுது ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு தமிழக அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவைச் சாதகமாக்கிக் கொண்டு தமிழக அரசு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்." என்று கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்