எச்.எம்.பி.வி பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத் துறை விளக்கம்!

Tamilnadu health department explanation about the impact of HMpV

கொரோனா போன்று வேகமாக பரவும் புதிய வைரஸ் ஒன்று சீனாவில் பரவி வருவதால் உலக மக்களையே அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது. எச்.எம்.பி.வி. (HMPV) எனப்படும் மனித மெடாநிமோ வைரஸ் பாதிப்பால் சீனாவில் உள்ள பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எச்எம்பிவி, கொரோனா, ஃபுளு காய்ச்சல் ஆகிய நோய்கள் ஒரே நேரத்தில் தாக்குவதால் சீனாவே திணறி வருகிறது. இத்தகைய சூழலில் தான் இந்தியாவில் முதல்முறையாக இரண்டு குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

அதிலும் குறிப்பாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளாத இரண்டு குழந்தைகளுக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதாவது கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த 3 மாத பெண் குழந்தை, அதனைத் தொடர்ந்து 8 மாத ஆண் குழந்தை என இருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மூன்று மாத குழந்தை டிஸ்சார்ஜ் ஆகி உள்ளது. தொடர்ந்து எட்டு மாத ஆண் குழந்தைக்குச் சிகிச்சை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தது. அதே சமயம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 2 மாதக் குழந்தைக்கு எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில், காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புகளுடன் அனுமதிக்கப்பட்ட 2 பேருக்கு எச்.எம்.பி.வி. தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியிருந்தது. இதன் மூலம் நாடு முழுவதும் ஒரே நாளில் 5 பேருக்கு எச்.எம்.பி. வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இது தொடர்பாகத் தமிழக சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், “எச்.எம்.பி. வைரஸ் புதியதல்ல. இது கடந்த 2001 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட வைரஸ்தான். நீண்ட ஆண்டுகளாகவே இந்த வைரஸ் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை.

இந்த வைரஸ் சென்னையில் ஒருவருக்கும், சேலத்தில் ஒருவருக்கும் கண்டறியப்பட்டுள்ளது. இருவரின் உடல் நிலை சீராக உள்ளது. எச்.எம்.பி. வைரஸ் பரவலைத் தடுப்பது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய சுகாதாரத் துறை ஆலோசனை நடத்தி உள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். நோய்த் தொற்று உள்ளவர்கள் தும்மல், இருமலின்போது வாயை மூடிக்கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளது.

Chennai Salem
இதையும் படியுங்கள்
Subscribe