Skip to main content

பக்தர்களின் 25 ஆண்டுக்கால கோரிக்கை; நிறைவேற்றிக் கொடுத்த தமிழக அரசு

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
TamilNadu govt has set up a rope car following the 25-year demand of devotees

108 திவ்ய தேச திருத்தலங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்குச் செல்ல மலையடிவாரத்திலிருந்து சுமார் 1306 படிக்கட்டுகள் மலைப் படியேறி சென்றால் மட்டுமே பக்தர்கள் லட்சுமி நரசிம்மரை தரிசிக்க முடியும். அதன்படியே பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர்.

ஆனால் வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெரும்பான்மையான பக்தர்கள் 1306 படிக்கட்டுகள் ஏற மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். பக்தர்களின் அவதியைப் போக்க அனைவரும் மலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அடிவாரத்தில் இருந்து கோவிலுக்குச் செல்ல ரோப்கார் அமைத்துத் தர வேண்டும் எனக் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் இதற்கான பணிகள் தொடங்கின. ஆனால் சில தடங்கல்கள் ஏற்பட்டு பணிகள் தாமதம் ஆகியது. அதன்பின் ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக அரசும் இந்த கோவில் ரோப்கார் விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் இந்த திட்டத்தை நிறைவேற்றினால் ஏதாவது விபத்து ஏற்படும் உயிர்பலி ஏற்படும் என்கிற வதந்தியால் அவர்கள் இந்த விவகாரத்தில் தலையிடவில்லை.

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு மீண்டும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பின் அமைச்சர் காந்தியின் முயற்சியால் அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன் உட்பட சிலரின் நிதியுதவி மற்றும் தமிழக அரசு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ரோப்கார் அமைக்கும் பணிக்கு ரூபாய் 9.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணி நடைபெற்று வந்தது . மேலும் ரூபாய் 11 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்குவதற்கு அடிப்படை வசதிக்காக கட்டுமான பணிகளும் நடைபெற்ற வந்த நிலையில் இரண்டு பணிகளும் தற்போது முடிவடைந்தது.

TamilNadu govt has set up a rope car following the 25-year demand of devotees

மலை அடிவாரத்தில் இருந்து ரோப் கார் வாயிலாக மலைக் கோயிலுக்குச் செல்ல 3 முறை ரோப்கார் சோதனை ஓட்டத்திற்கு பின்பு இன்று பக்தர்கள் பயன்பாட்டிற்காக சென்னையில் இருந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாகத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கொடியசைத்து துவக்கி வைத்ததோடு ரோப்காரில்  பக்தர்களோடு இணைந்து பயணித்து லட்சுமி நரசிம்மர் சாமி தரிசனம் செய்தனர்.

ரோப்கார் சேவை துவங்கப்பட்டதை தொடர்ந்து சோளிங்கர் பகுதியில் உள்ள பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது இதன் காரணமாக அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 25 வருடமாக வாக்குறுதி தந்து செயல்படுத்தாமல்  திமுக அரசு, அமைச்சர்கள், அதிகாரிகள் சாதித்துவிட்டார்கள் என்று மக்கள் நெகிழ்ச்சியடைகின்றனர். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆன்லைன் மூலம் வீடுகளுக்கே மது விற்கத் திட்டமா? - ராமதாஸ் கண்டனம்!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
Condemnation of Ramadoss for Planning to sell liquor online

ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே மதுவை கொண்டு சென்று விற்க திட்டமா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில்  பீர், ஒயின், மணமூட்டப்பட்ட மதுவகைகள் போன்ற குறைந்த அளவில் ஆல்கஹால் கொண்ட மதுவகைகளை  சொமாட்டோ, ஸ்விக்கி, பிக்பேஸ்கட் போன்ற ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகவும், அதன் சாதக பாதகங்கள் குறித்து ஆன்லைன் வினியோக நிறுவனங்கள், மது உற்பத்தியாளர்கள் போன்றோருடன் கலந்தாய்வு செய்து வருவதாகவும் தி எகனாமிக் டைம்ஸ் நாளிதழ்  செய்தி வெளியிட்டுள்ளது.  இந்த செய்தியில் கூறப்பட்டுள்ள தகவல்கள் உண்மையா? வீடுகளுக்கே சென்று மது விற்க திட்டமிடப்பட்டுள்ளதா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். ஒருவேளை இந்த செய்தி உண்மையாக இருந்தால் தமிழக அரசின் திட்டம் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

வீடுகளுக்கே கொண்டு சென்று மதுவை விற்பனை செய்வது என்பது மக்கள் நலனை விரும்பும் அரசுகளால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத தீமை ஆகும். ஆனால், தமிழக அரசு அத்தகைய தீமையை செய்யாது என்று உறுதியாக கூற முடியவில்லை. அதற்கு காரணம், விளையாட்டு அரங்குகள், பன்னாட்டு நிகழ்வுகள், திருமண விழாக்கள் போன்றவற்றில் மதுவகைகளை வினியோகித்தல், மதுக்கடைகளில் காகிதக் குடுவைகளில் குறைந்த விலையில் மது விற்பனை செய்வது போன்ற புரட்சிகரமான திட்டங்களை அறிமுகம் செய்யத் துடித்த வரலாறு தமிழக அரசுக்கு உண்டு. அதனால்தான் இந்த செய்தியும் உண்மையாக இருக்குமோ? என்று நம்பத் தோன்றுகிறது.

மது, புகையிலை எதுவாக இருந்தாலும் நுகர்வோருக்கு எளிதில் கிடைக்காத வகையில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தான் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல் ஆகும். அதன் மூலம் தான் மது - புகையிலை ஆகியவற்றின் பயன்பாட்டை குறைக்க முடியும் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் நம்பிக்கை ஆகும். ஏற்கனவே தெருவுக்குத்தெரு மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பதால் தான் மாணவர்கள் மதுவை வாங்கிச் சென்று பள்ளிகளில் வைத்து அருந்தும் கொடுமை நிகழ்கிறது. வீடுகளுக்கே  மதுவை நேரடியாக  கொண்டு வினியோகிக்க அனுமதித்தால் அதனால் ஏற்படும் விளைவுகளை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

போதை குறைந்த  மது வீடுகளுக்கே நேரடியாக வினியோகிக்கபட்டால், அது வீடுகளில் உள்ள குழந்தைகளையும், பெண்களையும் சுவைத்துப் பார்க்கத் தூண்டும். காலப்போக்கில்  வீட்டில் உள்ள பெண்களையும், பிள்ளைகளையும்  மதுவுக்கு அடிமையாக்கவே இந்த வழக்கம் வழிகோலும். ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே குடிக்கும் முறைக்கு முடிவுகட்டி குடும்பமே மது அருந்தும் கலாச்சாரத்தை உருவாக்கவே வீடு தேடு மதுவை கொண்டு சென்று கொடுக்கும் திட்டம் வழிவகுக்கும்.

தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை ஏற்படுத்துவோம் என்று வாக்குறுதி  அளித்த முதலமச்சர் மு.க.ஸ்டாலின், மதுப்பழக்கத்தை  ஊக்குவிக்கும் வகையிலான இத்தகைய திட்டங்களை அனுமதிக்கக் கூடாது.  மது வகைகளை ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்பனை செய்யும் திட்டம் இருந்தால் அதைத் தமிழக அரசு கைவிட வேண்டும்; இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

10க்கும் மேற்பட்ட முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளின் துறைகள் மாற்றம்

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Transfer of department for more than 10 key IAS officers

பத்துக்கும் மேற்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் உத்தரவின்படி தமிழக மருத்துவத்துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை செயலாளராக இருந்த மணிவாசகம் நீர்வளத்துறை செயலாளராக  நியமிக்கப்பட்டுள்ளார்.  

பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த சந்திரமோகன் தற்போது சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் உயர்கல்வித்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீர்வளத் துறை செயலாளராக இருந்த சந்திப் சக்சேனா செய்தி மற்றும் அச்சு காகிதத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனராக ஜான் லூயிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளராக மங்கத் ராம் ஷர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப்படியாக பத்துக்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.