Advertisment

கிலோ ரூ. 60க்கு தக்காளி விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை

tamilnadu government sale one kilo tomato 60 rupees

கடந்த ஒரு மாத காலமாக விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை என்பது கிலோ 10 ரூபாய் என்று இருந்த நிலையில் இன்றைய நிலையில் சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி 80 முதல் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த இரண்டே நாட்களில் தக்காளி விலை கிலோவிற்கு 60 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.

Advertisment

இதையடுத்து தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தவும், குறைந்த விலைக்கு தக்காளியை விற்பனை செய்யவும் தலைமை செயலகத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இது குறித்து அமைச்சர் பெரியகருப்பன் தெரிவிக்கையில், “தமிழ்நாட்டில் தக்காளி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த கூட்டுறவுத்துறையின் மூலம் செயல்பட்டு வரும்பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலையேற்றத்தை கருத்தில் கொண்டு தக்காளியை பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisment

இந்த ஆண்டு கோடையில் கடும் வெப்பம் நிலவியதால் விவசாயிகள் தக்காளி பயிரிடுவது கணிசமாக குறைந்ததாலும், அண்டை மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து குறைந்ததாலும்கடந்த வாரம் முதல் தக்காளி விலை அதிகரித்துள்ளது. தோராயமாக நாள் ஒன்றுக்கு சென்னைகோயம்பேடு மார்கெட்டிற்கு 800 டன் வரையிலான அளவில்வரக்கூடிய தக்காளி வரத்து தற்போது 300 டன் என்ற அளவில் குறைந்துள்ளது. இதனால் வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் கூட்டுறவுத்துறையின் மூலம் சென்னையில் செயல்பட்டு வரும் 27 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 2 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள், கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் 10 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள், திருச்சியில் செயல்பட்டு வரும் 13 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 1 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடை, மதுரையில் செயல்பட்டு வரும் 4 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள்,மேலும்தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருப்பூர், சேலம், ஈரோடு,வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 1 வீதம் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் என 62 பண்ணை பசுமை நுகர்வோர் பசுமை கடைகள் 3 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்தபட்சமாக தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.68 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலையானது வெளிச்சந்தையுடன் ஒப்பிடுகையில் ரூ.28 முதல் ரூ.32 வரை குறைவானதாகும். மேலும், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ரூ.60 முதல் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த விலையேற்றம் தற்காலிகமானதே. விரைவில் தக்காளி விலையேற்றம் கட்டுப்படுத்தப்படும். எனவே, பொதுமக்கள் அனைவரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி மற்றும் காய்கறிகளை வாங்கிப் பயன்பெறுங்கள்” எனக் கேட்டுக்கொண்டார்.

tomato
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe