Skip to main content

தமிழ்நாடு அரசின் மஞ்சப்பை விருது; மூன்றாம் பரிசு வென்ற புத்தக நிலையம்

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

tamilnadu government manjal bag award win tamil kalam book shop

 

தமிழக அரசு பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டினால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்படுகிறது. மண்ணில் புதையும் பிளாஸ்டிக் பொருட்களினால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. மேலும் பிளாஸ்டிக்கை எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.

 

இதனைக் கருத்தில் கொண்டு உலக அளவில் பல்வேறு தன்னார்வ நிறுவனங்கள், மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து மக்கும் தன்மை கொண்ட மஞ்சள் பை பயன்பாட்டை வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

 

அந்த வகையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அரியலூர் தமிழ்க்களம் புத்தக நிலையத்திற்கு மாநில அளவிலான தமிழக அரசின் மஞ்சப்பை மூன்றாம் பரிசும், விருதும் இன்று (06-06-2023) வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் துறை செயலாளர் சுப்ரியா சாஹூ ஐ.ஏ.எஸ்  விருதுகளை வழங்கினர்.

 

tamilnadu government manjal bag award win tamil kalam book shop

 

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் (Single Use Plastic) பைக்கு மாற்றாக நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ள துணிப்பையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது தமிழ்க்களம். இந்த புத்தக நிலையத்தின் உரிமையாளர் தமிழ்க்களம் இளவரசன் சுற்றுச்சூழல் விழிப்புணர்விற்காக நீண்ட காலமாக துணிப்பை இயக்கம் மூலமாக துணிப்பையை வழங்கி அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இளவரசன் போன்ற சமூக ஆர்வலர்கள் மேலும் ஊக்கத்துடன் செயல்படுவதற்கு இந்த விருது வழி வகுத்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“முதல்வர் ஸ்டாலின் பேரைக் கேட்டாலே பாஜகவுக்கு அதிருதில்ல” - அமைச்சர் மெய்யநாதன்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Minister Meyyanathan campaign in support of Congress candidate Karti Chidambaram

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி  வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரத்திற்கு ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சர் மெய்யநாதன், ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள குளமங்கலம், பனங்குளம், கீரமங்கலம், செரியலூர், கரம்பக்காடு, நகரம், சேந்தன்குடி, கொத்தமங்கலம் உட்பட பல கிராமங்களில் பிரச்சாரம் செய்தார்.

கீரமங்கலத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போது, “தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளை எல்லாம் ஒன்றிணைத்து இந்தியா கூட்டணியை உருவாக்கி பாஜகவை வீழ்த்தும் தலைவராக உருவெடுத்திருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் பேரைக் கேட்டாலே பாஜக அப்படியே அதிருது.

மத்தியில் ஒரு பாசிச ஆட்சி, 2018 ல் கஜா புயலில் பாதிக்கப்பட்டோம், இப்ப மிக்சாம் புயலால் பாதிக்கப்பட்டோம், சென்னை, தூத்துக்குடி வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் களத்திற்கு சென்று அவர்களுக்காக ரூ.2000 கோடி நிதி ஒதுக்கினார். பிரதமரை நேரில் சந்தித்து தமிழ்நாடு மக்களின் பிரதிநிதியாக போய் பாதிப்பிற்கு நிவாரணம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மத்திய அமைச்சர்களை அனுப்பி ஆய்வு செய்தார். பாதிப்பு என்ன என்பதை அறிக்கையாக கொடுத்தார்கள் ஆனால் இந்த நிமிடம் வரை ஒரு பைசா கூட வழங்காத பாசிச பாஜகதான், இந்த நாட்டை ஆள்கின்றவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.  நாம ஜிஎஸ்டி வரி கட்றோம். ஆனால் நமக்கு எதுவும் செய்யாமல் கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு லட்சம் கோடி கடன் கொடுக்கிறார்கள். கொடுத்த பிறகு தள்ளுபடி செய்கிறார்கள். ஆனால் இங்கே கல்விக் கடனுக்கு வட்டி மேல் வட்டி போட்டு வீட்டுக்கு வந்து மிரட்டிட்டு போறாங்க.

Minister Meyyanathan campaign in support of Congress candidate Karti Chidambaram

தப்பித் தவறி அதிமுகவும், பாஜகவும் வெற்றி பெற்றால் இந்த நாட்டில் நடக்கும் கடைசித் தேர்தல் இது என்பதை நீங்கள் யாரும் மறந்துவிடாதீர்கள். அதிபர் ஆட்சி போல வரும், அதிகாரங்கள் பறிக்கப்படும். சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாது. ஆகவே 130 கோடி மக்களையும் பாதுகாக்கின்ற பொறுப்பு உங்கள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலவச மின்சாரத்தை கலைஞர் தந்தார், ஆனால் அதிமுக எடப்பாடி ஆட்சியில் 10 ஹெச்.பிக்கு 3 லட்சம் பணம் வாங்கிட்டு மீட்டர் வச்சு பணம் வசூலிச்சாங்க. விவசாயிகளுக்கான அந்த மின்சாரத்தை இலவச மின்சாரமாக்கியது நம்ம முதலமைச்சர் தான். இன்று தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கி நாட்டையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். ஆகவே தான் அவரால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியா கூட்டணியை ஆதரியுங்கள்” என்றார்.

Next Story

மாவட்டம் விட்டு மாவட்டம் தாவும் சிறுத்தை; இரவு பகலாகத் தேடும் வனத்துறை - மிரட்சியில் மக்கள்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
People are afraid because of movement of leopards in Ariyalur

கடந்த சில நாட்களாக மயிலாடுதுறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த செய்தியால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது. இதனையடுத்து, தற்போது அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதை பொதுமக்கள் நேரில் பார்த்துள்ளனர். இதனால் செந்துரையைச் சுற்றிலும் உள்ள கிராம மக்கள் பயத்திலும் அதிர்ச்சியிலும் தூக்கம் இன்றி தவிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம்(11.4.2024) இரவு செந்துறை அரசு மருத்துவமனை பகுதியில் சிறுத்தை புகுந்ததை பூங்கோதை என்ற பெண்மணி உட்பட சிலர் நேரில் பார்த்துள்ளனர். பயந்து மிரண்டு போன அவர்கள் உடனடியாக செந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக காவல்துறை தீயணைப்புத்துறை பொதுமக்களும் அங்கு திரண்டனர். காவல்துறையினர் மருத்துவமனை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மருத்துவமனை சாலையில் குறுக்கே சிறுத்தை கடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து சிறுத்தையைத் தேட தொடங்கினர்.

People are afraid because of movement of leopards in Ariyalur

அப்போது ஒரு வெல்டிங் பட்டறை அருகே சிறுத்தை பதுங்கி இருந்ததை இளைஞர்கள் கண்டனர். அவர்கள் சிறுத்தையை விரட்ட சிறுத்தை அங்கிருந்து ஏந்தல் என்ற ஏரிக்குள் பாய்ந்து சென்று மறைந்துள்ளது. பின்னர் இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். ஆனால் விடிய விடிய தேடியும் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையில், அந்தச் சிறுத்தை செந்துறை அருகில் உள்ள உஞ்சினி, பொன்பரப்பி, சிதலவாடி, பகுதிகளில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான முந்திரி காடுகளுக்குள் புகுந்து பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் கோவை மாவட்டம் வால்பாறை மலை காடுகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட வனத்துறையினரை செந்துறை வரவழைத்தனர். அவர்கள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிவதில் நிபுணர்கள் என்று கூறப்படுகிறது.

People are afraid because of movement of leopards in Ariyalur

இதையடுத்து அரியலூர் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தலைமையில் வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலமும் அப்பகுதியில் உள்ள ஓடை பகுதியில்  கண்காணித்ததோடு, சில இடங்களில் கூண்டு வைத்து அந்தக் கூண்டுக்குள் ஆடுகளை விட்டு சிறுத்தையை வரவழைத்து பிடிப்பதற்கு கடும் முயற்சி செய்து வருகின்றனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது செந்துறைப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியாகியுள்ளது. நின்னையூர், பகுதியில் சிறுத்தையின் காலடித்தடம் பதிந்துள்ளது.

மேலும் செந்துறை பகுதியில் கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியாகி உள்ளது. மயிலாடுதுறை பகுதியில் நடமாடிய சிறுத்தை அங்கிருந்து காடுகள் அதை ஒட்டி உள்ள ஓடை பகுதிகள் வழியாக செந்துறை பகுதிக்கு வந்திருக்கலாம் என்றும், மேலும் அது அங்கிருந்து காடுகள் மற்றும் ஓடை வழியாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பச்சை மலைக்கு செல்வதற்கான வாய்ப்பு உண்டு. அந்தச் சிறுத்தை இதுவரை விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளையோ நாய்களையோ அடித்து உணவாக சாப்பிட்டதாக தகவல் இல்லை. அதன் வழிப்போக்கில் கிடைக்கின்ற உணவை சாப்பிட்டு சென்று கொண்டிருக்கிறது.

சிறுத்தையை பிடிக்கும் பணியில் தஞ்சாவூர் ,கடலூர், பெரம்பலூர், அரியலூர், ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வன அலுவலர்கள் கால்நடை மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணித்து வருகிறோம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தச் சிறுத்தை நடமாட்ட அச்சத்தினால் செந்துறைப்பதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

People are afraid because of movement of leopards in Ariyalur

சிறுத்தை பிடிபடுமா? தப்பி செல்லுமா? என்று மக்கள் பதைபதைப்புடன் கிராமப்புறங்களில் பேசிக் கொள்கிறார்கள். இதனால் இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட கிராமங்களில் மக்கள் நடமாட்டம் இரவு நேரங்களில் குறைந்து காணப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தல் பரபரப்பு ஒரு பக்கம், சிறுத்தை நடமாட்டத்தினால் ஏற்பட்ட பரபரப்பு மறுபக்கம் என மக்கள் மிரண்டு போய் கிடக்கிறார்கள்.