/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nikazhchiyil paesum k t rajendrabalaji.jpg)
ஏதாவது ஒரு கருத்தைக் கூறி சர்ச்சை ஆவதும், மீம்ஸ்களில் அடிபடுவதுமாக இருக்கிறார் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. சேனல் மைக்கைப் பார்த்தால் போதும், சரியோ, தவறோ, சுவாரஸ்யமான கருத்து ஒன்றை உதிர்த்துவிடுவார். ‘எடப்பாடி நல்லாட்சி தருகிறார்; ஓ.பி.எஸ். ஒத்துழைப்பு தருகிறார்..’ என்று ஜால்ரா அடிப்பதெல்லாம் செய்தியாகிவிடாது என்பது அவருக்குத் தெரியும்.
அதனாலேயே, கமல்ஹாசன் போன்ற அரசியல் பிரபலங்களை அவ்வப்போது விமர்சனம் செய்து, செய்தியில் தன் பெயர் அடிபடும்படி பார்த்துக்கொள்வார். அவரது இந்த டெக்னிக்கை அவரது விசுவாசிகள் நன்கறிவார்கள். அதனால்,’அமைச்சரு இன்னைக்கு புதுசா என்ன சொல்லப்போறாருன்னு பார்ப்போம்?’ என்று அவர்களும் ஆர்வமாகிவிடுவார்கள். இதுபோன்ற எதிர்பார்ப்புக்களையெல்லாம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தவறாமல் நிறைவேற்றிவிடுகிறார்.
சிவகாசியில் நடைபெற்ற விருதுநகர் மாவட்ட மினிபஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் 18-ஆம் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி என்ன பேசியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம். ”போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் பண்ணியபோது, பொதுமக்களுக்கு பெரிதும் உதவியது மினிபஸ்கள்தான். அதனால், மினிபஸ் உரிமையாளர்களுக்கு அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்.” என்று பேசி அந்த விழாவில் கைதட்டைப் பெற்றிருக்கிறார்.
அவரது இந்தப் பேச்சை ரசிக்காத போக்குவரத்து ஊழியர் ஒருவர் நம்மிடம் “போக்குவரத்து ஊழியர்கள் ஏன் ஸ்டிரைக் பண்ணுனாங்கன்னு அமைச்சருக்கு தெரியாதா? வேலை நிறுத்தத்துக்குக் காரணமே தமிழக அரசின் முறையற்ற செயல்பாடுகள்தான்னு அவருக்குத் தெரியாதா? அப்படின்னா, மினிபஸ் முதலாளிகளுக்கு சப்போர்ட் பண்ணுவார்; அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக நடந்துகொள்ள மாட்டார். இப்படித்தானே எடுத்துக்கணும்.
என்ன பேச்சு இது? ஏற்கனவே, அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தி, தனியார் பஸ் முதலாளிகளும் கட்டணத்தை உயர்த்தி பலனடைவதற்கு வழி செய்திருக்கிறது இந்த அரசு. அதற்கான தனி கவனிப்பும் நடந்திருக்கிறது. இந்த லட்சணத்தில், ஓபனாகவே, மினிபஸ் உரிமையாளர்களுக்கு அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று திருவாய் மலந்திருக்கிறார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.” என்றார் ஆதங்கத்துடன். சில நேரங்களில் உள்ளது உள்ளபடி உண்மை பேசுவதும்கூட, பொதுவெளியில் உறுத்தலாகிவிடுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)