/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ch3_51.jpg)
மக்களின் குறைகளுக்கு தீர்வு காண கொண்டுவரப்பட்ட அரசு இ-சேவை என்பது காகித அளவிலேயே இருப்பதாக, சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் மசினகுடி கிராமம், யானைகள் வழித்தடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு டாஸ்மாக் கடைகள் துவங்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த ஜெயினுலாபுதீன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மசினகுடி பகுதியில் டாஸ்மாக் கடைகள் ஏதும் துவங்கும் திட்டம் இல்லை எனத் தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இது சம்பந்தமாக கடந்த செப்டம்பர் மாதம் அளித்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாததால், இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து, பொதுமக்களின் மனுக்களுக்கு பதிலளிக்காத அதிகாரிகளின் மெத்தன போக்குக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ‘மக்களின் குறைகளுக்கு தீர்வு காண கொண்டு வரப்பட்ட அரசு இ-சேவை என்பது, காகித அளவிலேயே உள்ளது. கோரிக்கை மனுக்களுக்கு அதிகாரிகள் உரிய பதிலை அளித்து இருந்தால், இதுபோன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்க மாட்டாது.’என்று அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
மேலும் மனுதாரரின் கோரிக்கை மனுவுக்கு பதில் அளிக்காத அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்கும் படி,ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)