Skip to main content

சிபிஐக்கு மாற்றுவது, எடப்பாடி அரசின் கையாலாகாதத்தனம்! - குமுறும் பக்தர்கள்!

Published on 02/08/2018 | Edited on 27/08/2018


சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதாக டிவிசன் பென்ச் சிறப்ப நீதிபதிகளிடம் அரசு வழக்கறிஞர் தெரிவித்திருப்பது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பழனி ஐம்பொன் சிலை மோசடியில் ஸ்தபதி முத்தையா உள்பட முன்னாள் கோவில் இணை ஆணையர்கள் சிலரையும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான காக்கிகள் கைதுசெய்து அதிரடி விசாரணை செய்தும் வருகிறார்கள். அதுபோல் கொள்ளையடிக்கப்பட்ட ராஜராஜசோழன் சிலை உள்பட பல சிலைகளை மீட்டும் சிலை கடத்தியவர்களையும் கைது செய்து இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் சாமி சிலை செய்ததின் மூலம் முறைகேடு செய்ததாக இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவையும் சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான காக்கிகள் கைது செய்தனர்.

அப்படியிருக்கும்போது இந்த எடப்பாடி அரசு திடீரென சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதாக அரசு வழக்கறிஞர் மூலம் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருப்பது பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

பழனி ஐம்பொன் சிலை மோசடி உள்பட தமிழகத்தில் நடந்த சிலை மோசடி சம்மந்தமாக இதுவரை பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகளை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாரே தவிர, இந்த வழக்குகளில் எந்த ஒரு தொய்வும் ஏற்படவில்லை. அரசுதான் பொன் மாணிக்கவேல் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் குற்றவாளிகளை தப்பிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஐ.ஜி. விசாரணைக்கு இடையூறு செய்து வருகிறார்கள்.

இது பொதுமக்கள் முதல் எங்களைப் போல் உள்ள ஆன்மீக அமைப்புகளுக்கும் நல்லாவே தெரியும். இருந்தாலும் ஐ.ஜி.யின் அதிரடி நடவடிக்கையை கண்டு மக்களும் பூரித்து போய் வருகிறார்கள். விசாரணையும் நல்லமுறையில் போய்க்கொண்டிருப்பதை கண்டு ஐ.ஜி.யை பொதுமக்கள் பாராட்டித்தான் வருகிறார்கள். அப்படி இருக்கும்போது திடீரென இந்த எடப்பாடி அரசு இந்த சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை எல்லாம் சிபிஐக்கு மாற்றப் போகிறோம் என்றார்.

இந்த வழக்கில் உள்ள உண்மையை மூடி மறைக்க பார்க்கிறது. அதோடு இந்த சிலை மோசடியில் அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை தொடர்பு இருக்கலாம். அதை மறைப்பதற்குத்தான் சிபிஐக்கு மாற்றப்போகிறார்கள் என்பதை நினைக்கும் போது இதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்தியவாவிலேயே சிறந்தவர்கள் தமிழக போலீசார் தான் என்ற பெயர் உண்டு. அந்த பெயரை எடப்பாடி அரசு அசிங்கப்படுத்திவிட்டது என்றார் பழனியைச் சேர்ந்த ஞானதண்டாயுதபாணியின் பக்தர் பேரவை தலைவரான செந்தில்.
 

senthil

செந்தில்

இது சம்மந்தமாக முருக பக்தரான செல்வத்திடம் கேட்டபோது... சிபிஐ விசாரணைக்கு கோர்ட் அனுமதிக்கக் கூடாது. ஏற்கனவே ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்று கூறி இதே கோர்ட் தான் மீண்டும் ஐ.ஜி.யை விசாரிக்க உத்தரவிட்டது. அதுபோல் தொடர்ந்து ஐ.ஜி. விசாரிக்க கோர்ட் உத்தரவு போட வேண்டும். இதுவரை தமிழகத்தில் ஆண்ட எந்த ஒரு முதல்வரும் இப்படி ஒரு முடிவு எடுத்ததில்லை வழக்கில் தொய்வு ஏற்பட்டால் தான் அதை சிபிசிஐடிக்கு மாற்றுவார்கள்.

செல்வம்

se


அதிலும் சரிவர விசாரணை இல்லையென்றால் சிபிஐக்க மாற்றுவார்கள். அதுதான் நடைமுறையும் கூட. ஆனால் இந்த சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் அதிரடியாக விசாரிக்கப்பட்டு கைது செய்தும் வருகிறார்கள். அப்படியிருக்கும்போது இந்த எடப்பாடி அரசு சிபிஐக்கு மாற்றப் போகிறோம் என்று சொன்னால் இதிர் ஏதோ உள்நோக்கம் இருக்கு அதுபோல் எடப்பாடி அரசு கையாளாகாத தனம் என்றுதான் சொல்லமுடியும். இதனால மற்ற மாநில போலீசாரும் தமிழக போலீசாரை மதிக்க மாட்டார்கள் என்று கூறினார்.

ஜெகன்

jegan



இது சம்மந்தமாக பழனியைச் சேர்ந்த இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகனிடம் கேட்டபோது... இந்த அ.தி.மு.க. ஆட்சியிலும் தி.மு.க. ஆட்சியிலும் தான் சிலை மோசடி நடந்திருக்கிறது. அதிகரிகள் முதல் அமைச்சர்கள் வரை மாற்ற போகிறார்கள். இதை மனதில் வைத்துத்தான் சிபிஐக்கு மாற்றப்போகிறார்கள். ஆனால் சிலைகளை பற்றிய விவரங்கள் சிபிஐக்கு தெரிய வாய்ப்பில்லை. அதனால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கூடாது.



தொடர்ந்து பொன்மாணிக்கவேல் விசாரணை செய்தால் தான் தமிழழத்தில் கடத்தப்பட்ட சிலைகளை தொடர்ந்து மீட்க முடியம். அதுபோல் சிலைகள் மூலம் முறைகேடுகள் செய்த அதிகாரிகளையும் தொடர்ந்து கண்டுபிடித்து தண்டனை வாங்கக் கொடுப்பதின் மூலம் சிலை கடத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும். அதனால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கூடாது மீறி மாற்றினால் எங்க அமைப்புகள் மூலம் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் என்று கூறினார். ஆக எடப்பாடி அரசின் இந்த கொள்கை முடிவு பொதுமக்கள் மத்தியிலும் பக்தர்கள் மத்தியிலும் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

சார்ந்த செய்திகள்