/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/CHC1_57.jpg)
தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரியும் 5,000 ஒப்பந்த ஊழியர்களுக்கு நிவாரண நிதி வழங்க உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கடந்த 2018- ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இச்சங்கத்தில் 1995- ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் பணிபுரிந்து வரும் 5,000 பேர் தற்போது உறுப்பினர்களாக உள்ளனர்.
தமிழகத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய ‘தானே, வர்தா, ஒக்கி, கஜா’ போன்ற புயல் பாதிப்புகளின் போது, மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் தினக்கூலி அடிப்படையில் இரவு பகலாக மின் தடம் சீரமைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் 24- ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. மின்வாரியத்தில் தினக்கூலி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு போதுமான வருமானம் இல்லாமல், அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளனர்.
தமிழக அரசு கடந்த ஏப்ரல் 8- ஆம் தேதி மற்றும் 14- ஆம் தேதி அமைப்பு சாராத தொழிலாளர்களுக்கு அவசரகால நிதியாக 1,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து 2000 ரூபாயை இதுவரை விடுவித்துள்ளது.
பதிவு செய்யப்பட்ட தங்கள் சங்கத்திற்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும் என மின்பகிர்மான கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநருக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே தங்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள ஒப்பந்த பணியாளர்களுக்கு தலா 2,000 ரூபாயும், மளிகைப் பொருட்களையும் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் மற்றும் பி.டி ஆஷா அடங்கிய அமர்வு, தமிழக அரசு மே 29- ஆம் தேதி தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif.gif)